search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளியில் பனியன் நிறுவன கட்டிட சுவர் இடிந்து 4 பேர் காயம்
    X

    பனியன் நிறுவன கட்டிடம் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ள காட்சி.

    ஊத்துக்குளியில் பனியன் நிறுவன கட்டிட சுவர் இடிந்து 4 பேர் காயம்

    • 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது.
    • ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள கூலிபாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. மேற்கூரையில் அலுமினிய தகடுகளால் ஆன கூலிங் சீட் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் கட்டிங், டெய்லரிங், அயர்னிங் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ் நாட்டு தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வேலைகளை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து மாலை வேளையில் டீ அருந்துவதற்கான இடைவேளையில் அனைவரும் வெளியே உள்ள கடைக்கு சென்று உள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பனியன் நிறுவனத்திற்குள் இருந்து பணியை செய்து வந்தனர்.

    அப்போது கனமழையோடு கூடிய சூறைக்காற்று வீசியதில், அலுமினியத்தால் ஆன தகர கொட்டகை, காற்றில் பறந்தது. மேலும் பலத்த சூறைக் காற்றின் வேகம் தாங்காமல் பனியன் நிறுவனத்தின் ஹரலோ பிளாக் சுவர்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    திடீரென நடந்த இந்த விபத்தில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர் .இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×