search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டணத்தை குறைக்க அமைச்சரிடம் பனியன் தொழில் அமைப்பினர் மனு
    X

    கோப்பு படம்.

    மின் கட்டணத்தை குறைக்க அமைச்சரிடம் பனியன் தொழில் அமைப்பினர் மனு

    • இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது.
    • நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்து மேலும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.24-

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக திறப்பு விழாவுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா வந்திருந்தார். விழாவில், அனைத்து பனியன் தொழில் அமைப்புகள் சார்பில் பொது கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    தொழில் அமைப்பினர் அளித்த கோரிக்கை மனு விவரம் வருமாறு:-

    இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி சரிந்துள்ளது. கடந்த ஆண்டு நூல்விலை அபரிமிதமாக உயர்ந்ததால், பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டது.

    வங்கதேசம், வியட்நாம், சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற முடியவில்லை. பின்னலாடை உற்பத்தி மட்டுமல்லாது, நிட்டிங், சாயத்தொழில், காம்பாக்டிங், ரைசிங் போன்ற சார்புடைய தொழில்களும் பாதித்தன.திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களில் 75 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்.

    சங்கிலி தொடர் போன்ற ஜாப் ஒர்க் சேவை கிடைத்தால் மட்டுமே தரமான ஆடைகளை தயாரிக்க முடியும். திருப்பூர் ஆடைத் தொழிலின் நிலைமை மாறுபட்டுள்ளதால் தேவையான உள்கட்டமைப்பு, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகள் சலுகை விலையில் வழங்கப்பட வேண்டும்.

    ரஷ்யா - -உக்ரைன் போர் காரணமாக ஜவுளி உற்பத்தி நடவடிக்கை மந்தமாகி விட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இக்கட்டான இந்நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    தொழில்நிலை மந்தமாக இருக்கும் போது மின்கட்டணம் உயர்ந்தது ஸ்தம்பிக்க செய்துள்ளது. நிலை கட்டண உயர்வும், பீக் ஹவர் கட்டணமும், தொழிலை சரிவு நிலைக்கு தள்ளிவிடும். மின்சாரத்தை பயன்படுத்தாத நேரத்திலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டணத்தை குறைத்து தொழில் சீராக இயங்க உதவிட வேண்டும். தமிழக அரசு கோரிக்கையை பரிசீலித்து திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    விசைத்தறிகள்

    கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி அனைத்து வகை மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. இதில் விசைத்தறிகளுக்கு 3ஏ-2 பிரிவின் கீழ் யூனிட்டுக்கு 4.50 ரூபாயில் இருந்து 6.40 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த விசைத்தறியாளர்கள், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், அதுவரை மின்கட்டணம் செலுத்தப்போவதில்லை எனக்கூறி பல கட்ட போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுடன் விசைத்தறியாளர் சங்கத்தினர் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக கடந்த மார்ச் 3-ந்தேதி மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு 1.10 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையில் விசைத்தறி யாளர்கள், மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக மாநில முதல்வருக்கு மனு வழங்கி வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக மனு ஒன்றையும் அச்சடித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் போக, அனைத்து சிலாப்களுக்கும் யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின் கட்டண பயன்பாடு அடிப்படையில் 70 பைசாவில் இருந்து 1.40 ரூபாய் வரை யூனிட்டுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் கடந்த மார்ச் முதல் தேதி வரை கூடுதல் கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து சிலாப்களுக்கும், யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்த வேண்டும். நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். நிலுவை மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு என்பதில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×