search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்வரத்து அதிகரிப்பால் ஆறு-குளங்களுக்கு சிறுவர்களை அனுப்பக்கூடாது - பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஆறு-குளங்களுக்கு சிறுவர்களை அனுப்பக்கூடாது - பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

    • திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது.
    • நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    திருப்பூர் :

    உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில்வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள்எச்சரிக்கையாக இருக்குமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில், இம்மாவட்டங்களை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் சில பகுதிகளில் பருவமழை பெய்து வருவதன் மூலம் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திருப்பூர், திருவள்ளூர், இராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகளவு இருந்து வருகிறது. அமராவதி அணையின் முழு கொள்ளவான 90 அடியினை எட்ட உள்ள நிலையில், உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் அதிகமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அமராவதி ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிபொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகளவில் உள்ளதால், நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் குளத்திற்கும், நொய்யல் ஒரத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திற்கும் மற்றும் முத்தூர் கதவணைக்கும் எந்த நேரத்திலும் மேலும் வெள்ள நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப்பொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×