search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    50 ஆடுகள் திருட்டு - போலீஸ் பிடியில் சிக்காமல் டிமிக்கி காட்டும் கும்பல்
    X

    50 ஆடுகள் திருட்டு - போலீஸ் பிடியில் சிக்காமல் டிமிக்கி காட்டும் கும்பல்

    • ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் முக்கால்வாசி மக்கள் விவசாயிகள். இவர்கள் அனைவரும் விவசாயம் மற்றும் ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பையே பெரிதும் சார்ந்துள்ளனர். காங்கேயகம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தற்போது மானாவாரி நிலங்களில் ஆடுகள் வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் மானாவாரி நிலங்களில் ஆடுகள் வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டலாம் என விவசாயிகள் கணக்கு போட்டால், ஆடு திருடர்களின் கணக்கு வேறாக உள்ளது. விவசாயிகள் மானாவாரி நிலங்களில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நிலத்திலேயே மேய்ச்சலுக்கு பின் பட்டியில் அடைத்து வைக்கின்றனர்‌.

    இவ்வாறு பட்டிகளில் அடைக்கப்படும் ஆடுகளை குறிவைத்து திருடர்கள் ஆடுகளை தொடர்ச்சியாக திருடி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில் காங்கயம் அருகே விவசாயி ஒருவரது பட்டியில் அடைத்து வைத்திருந்த 9 ஆடுகள் மற்றும் சேவல் ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா ஊதியூர் அருகே உள்ள நிழலி கிராமம், குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்(வயது40). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆடுகள் மேய்ச்சல் முடிந்த பின்பு மாலை அனைத்து ஆடுகளையும் தோட்டத்திலுள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டியில் அடைத்து இருந்த 30 ஆடுகளில் 9 ஆடுகள் மற்றும் ஒரு சேவல் காணாமல் போயிருந்தது. அக்கம் பக்கத்தில் சென்று விசாரித்து பார்த்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    பட்டியை சுற்றி உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை அறுத்து விட்டு மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    காங்கயம் தாலுகா பகுதியில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

    இதுவரை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடு திருட்டு விவசாயிகள் மத்திய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் கடந்த சில நாட்களாக இந்த திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தொடர் முயற்சி செய்தும் அந்த திருட்டு போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் போலீசார் இந்த திருட்டு கும்பலை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர்.

    Next Story
    ×