search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொருளாதாரம் பாதிப்பால் ஆடை கொள்முதலை நிறுத்திய சர்வதேச சில்லரை வர்த்தக நிறுவனங்கள்
    X

    கோப்புபடம்.

    பொருளாதாரம் பாதிப்பால் ஆடை கொள்முதலை நிறுத்திய சர்வதேச சில்லரை வர்த்தக நிறுவனங்கள்

    • ரஷ்யா - உக்ரைன் நாடுகள் போர் ஆகியவற்றால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
    • அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளது.

    திருப்பூர் :

    ஆயத்த ஆடை கொள்முதலை சர்வதேச சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இதனால் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பின்னலாடை தயாரிப்பு ஆர்டர் வருவது பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் துரைசாமி கூறியதாவது :- கொரோனா தொற்று பரவல், ரஷ்யா - உக்ரைன் நாடுகள் போர் ஆகியவற்றால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளது.

    வேலைவாய்ப்பு குறைவு, வேலை நேரம் குறைவால், தனிநபர், குடும்ப வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயத்த ஆடை ரகங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதை வெளிநாட்டு மக்கள் குறைத்துள்ளனர்.சர்வதேச அளவில் கிளைகளை கொண்டுள்ள சில்லரை வர்த்தக நிறுவனங்கள், 6முதல் 9 மாதங்களுக்கு முன்பே தங்கள் வர்த்தக மையங்களில் விற்பனை செய்யவேண்டிய ஆடை ரகங்கள் குறித்து திட்டமிடுகின்றனர்.

    வர்த்தக பாதிப்பால் வால்மார்ட் போன்ற பிரபல நிறுவனங்களின் குடோன்களில் ஆடை இருப்பு அதிகரித்துள்ளது. விற்பனை சரிவு, நிதி நெருக்கடி, இருப்பு வைப்பதற்கு போதிய இடமின்மை உள்ளிட்ட காரணங்களால் சில்லரை வர்த்தக நிறுவனங்கள், ஆடை கொள்முதலை நிறுத்தியுள்ளன.ஏற்கனவே வழங்கிய ஆர்டருக்கான ஆயத்த ஆடைகளையும் தாமதமாக அனுப்ப கோருகின்றனர். சில வர்த்தகர்கள் ஆர்டர்களை ரத்து செய்கின்றனர்.

    இதனால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை மிகவும் குறைந்து உள்ளது. திருப்பூர் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர் இழப்பை எதிர் கொண்டு வருகின்றன.அடுத்த சில மாதங்களில் இழந்த பொருளாதாரத்தை மக்கள் மீட்டெடுத்து விடுவர்.அதன்பின் சர்வதேச ஆடை வர்த்தகம் இயல்புநிலைக்கு திரும்பும்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×