search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் -  திருப்பூர் மாவட்டத்தில்  3 பள்ளிகள் தேர்வு
    X

    கோப்புபடம்.

    சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் - திருப்பூர் மாவட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு

    • சுகாதாரமான குடிநீர், பள்ளி வளாகம் தூய்மை, கழிவறை வசதிகளுடன் காணப்படுவதால் இடுவாய் பஞ்சாயத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம்.
    • தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    கடந்த 2020 -21ம் கல்வியாண்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளி வீதம், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வெள்ள கோவில் - முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உடுமலை - ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வாகியுள்ளன.

    இது குறித்து பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி கூறியதாவது:- கடந்த 2002ல் இப்பள்ளி துவங்கிய போது முதல் தலைமையாசிரியராக நான் பணியாற்ற துவங்கினேன். அப்போது 30 குழந்தைகள் . மரத்தடியில் தான் பாடம் நடக்கும். போதிய வகுப்பறைகள் இருக்காது. இன்று 430 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    தொடர்ந்து எஸ்.எஸ்.ஏ., பொதுமக்கள் மற்றும் மங்கலம் மேற்கு ரோட்டரி ஆகியோரின் நிதிஉதவியால் பல கட்டடங்கள் எழுப்ப மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. சுகாதாரமான குடிநீர், பள்ளி வளாகம் தூய்மை, கழிவறை வசதிகளுடன் காணப்படுவதால் இடுவாய் பஞ்சாயத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம்.

    பள்ளியில் 200 மரங்கள் வைத்து பராமரிக்கப்படுகின்றன. ஒரு ஏக்கர் 10 சென்ட் முழுவதும் காம்பவுண்ட் சுவர் உண்டு. அனைவரது கூட்டு முயற்சியே விருதுக்கு காரணம். இவ்விருது கிராமப்புற பள்ளிகளுக்கு புது உத்வேகத்தை அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி மலர் அரசு கூறுகையில், பொதுமக்கள், பெற்றோர் ஒத்துழைப்பால் இப்பள்ளிக்கு இப்பெருமை கிடைத்துள்ளது. 382 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். முன்னாள் மாணவர்கள் பள்ளி வகுப்பறை முழுவதும் டைல்ஸ் ஒட்டித்தந்தனர்.

    உடைந்த ஓடுகளை மாற்றித்தந்தனர். மாணவிகள் வசதிக்காக இன்சிலேட்டர் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையிலும் தன்னிறைவு அடைந்துள்ளதால் இவ்விருது சாத்தியமாகியுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி இரண்டும் கற்பிக்கிறோம் என்றார்.

    Next Story
    ×