search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    X

    திருப்பூர் குமரன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி

    பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    • திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்குஅமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர்மாலை அணிவித்தனர்
    • திருப்பூர்குமரன் வாரிசுதாரர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் பிறந்நாளை முன்னிட்டு, திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

    இந்த விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    திருப்பூர் குமரன் சென்னிலையில் 4-10-1904-ல் நாச்சிமுத்து முதலியார், கருப்பாயி தம்பதியினருக்கு முதல் பிள்ளையாக பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி. குடும்ப சூழ்நிலை காரணமாக 5&ம் வகுப்பிலேயே தனது பள்ளி படிப்பை முடித்துக்கொண்டார். வறுமையின் காரணமாக மேற்கொண்டு பள்ளி படிப்பை தொடர முடியாத காரணத்தினால் தனது குடும்ப தொழிலான கைத்தறி நெசவு செய்து வந்தார். இவர் தனது 19-வது வயதில் ராமாயி என்ற பெண்ணை 1923-ம் ஆண்டு மணந்தார். கைத்தறி தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் ஈரோடு சென்று, பஞ்சு மில்லில் எடை போடும் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார். ஆரம்பம் முதலே காந்தியின் கொள்கையில் ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மேலும், 4-1-1932-ல் காந்தியடிகளை ஆங்கிலேய அரசு கைது செய்தது.

    இந்த செய்தி காட்டு தீ போல் பரவியது. காங்கிரஸ் தொண்டர்கள் கொதிதெளுந்தனர். இதனால் கண்டன போராட்டங்கள் நடத்தவும், சட்ட மறுப்பு இயக்கம் நடத்தவும் முடிவு செய்தனர். இதன் தொடர்சியாக தமிழ்நாட்டில் திருப்பூரில் போலீசாரின் தடையை மீறி 10-1-1932-ம் ஆண்டு தியாகி பி.எஸ். சுந்தரம் தலைமையில், நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் முதல் வரிசையில் காங்கிரஸ் கொடியை பிடித்துக்கொண்டு குமரன் வந்தார். வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கோஷம் எழுப்பிய போது, போலீசாரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலால் உடல், தலையில் பலத்த காயத்துடன், தன் கையில் இருந்த கொடியை தரையில் சாய விடாமல் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை எழுப்பி நன் நாட்டு பற்றியை பறைசாற்றினார். குமரன் கீழே விழுந்தாலும், அவரது கையில் வைத்திருந்த கொடி தரையில் விழாமல் பிடித்திருந்தார். திருப்பூர் வீதியிலேயே கொடிகாத்த குருதி வெள்ளத்தில் குமரன் வீழ்ந்து கிடந்தார். அடிபட்டு பலத்த காயங்களுடன் இருந்த குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, சுயராஜ்யம் வராதா என இறுதி சொற்களுடன் 11-1-1932-ம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு சென்றார். இதனால் அவர் கொடி காத்த குமரன் என பெயர் பெற்றார்.

    விண்ணில் பறக்கும் கொடி மண்ணில் வீழ்வதா என தன்னுயிர் கொடுத்து நாட்டின் மானம் காத்த பெருமை, இந்திய விடுதலை வரலாற்றில் தனிப்பெருமை வாய்ந்தது. திருப்பூர் குமரன் நினைவாக அவரது திருவுருவத்துடன் கூடிய அஞ்சல் வில்லையை 2007-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டு சிறப்பு செய்தது. திருப்பூர் குமரன் நினைவகம், திருப்பூர் ரெயில் நிலையம் எதிரில் 11,195 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. நினைவு மண்டபம் கட்டிடம் 2500 சதுர அடியில் ரூ4,80,353 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் பின்னர் திருப்பூர் குமரன் வாரிசுதாரர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கவுன்சிலர் திவாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சதீஷ்குமார், வடக்கு தாசில்தார் கனகராஜ் மற்றும் குமரனின் வாரிசுதாரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×