search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பள உயர்வு பேச்சுவார்த்தை - பாத்திர தொழிலாளர்கள் முக்கிய முடிவு
    X

    கோப்புபடம்.

    சம்பள உயர்வு பேச்சுவார்த்தை - பாத்திர தொழிலாளர்கள் முக்கிய முடிவு

    • பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு பாத்திர உற்பத்தியாளர்களுக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி அழைப்பு விடுத்தது. இதையடுத்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை எவர்சில்வர் மற்றும் பித்தளை, செம்பு உற்பத்தியாளர் தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் கூடுதல் சதவீதம் கூலி உயர்வு வழங்க முடியாது என்று கூறி பாத்திர உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பான முழுவிவரங்களையும் பாத்திர தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளக்கக்கூட்டம் அனுப்பர்பாளையம் - ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் எச்.எம்.எஸ்., சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாமணி கலந்து கொண்டு தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக வாழ்த்தி பேசினார். மேலும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி தரப்பினரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் இல்லாமலேயே தொழிற்சங்கங்கள் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி போதிய கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் இன்று (சனிக்கிழமை) எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்களுடனும், வரும் திங்கட்கிழமை பித்தளை, செம்பு உற்பத்தியாளர்களுடனும், வரும் செவ்வாய்கிழமை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி அறிவித்தது.இந்த கூட்டத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×