search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி. வாய்க்காலில்  தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    கோப்புபடம். 

    பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

    • முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது.
    • கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    திருமூர்த்தி அணையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கிலோ மீட்டர் நீளம் பி.ஏ.பி. கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 லாரி அளவு தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் திருட்டின் மதிப்பை கணக்கிடுகையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 கோடி வரை நடந்திருக்கலாம். கால்வாயின் மொத்த தூரமான 126 கிலோ மீட்டருக்கும் கணக்கிட்டால் பல கோடி ரூபாய் வரை தண்ணீர் திருட்டு நடந்திருக்க கூடும் என காங்கயம்-வெள்ளகோவில் பி.ஏ.பி. நீர் பாசன சங்க தலைவர் பி.வேலுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் நீர் பாசன சங்கத்தின் மூலம் போடப்பட்ட விதிமுறைகளை தாண்டி பல அடி ஆழத்திற்கு குழாய்கள் அமைத்தும், அதிக திறன் கொண்ட மோட்டார்கள் வைத்தும் கால்வாயில் பாயும் நீரை திருடுகின்றனர். முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டினார். இது போன்று பல இடங்களில் பல விதமாக தண்ணீர் திருடுவதன் மூலம் கடைமடை விவசாயிகள் தண்ணீரை அனுபவிக்கும் சட்டப்பூர்வ உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீர் பாசன அதிகாரிகள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சாரத் துறை ஆகியோர் சேர்ந்து தண்ணீர் திருட்டை தடுத்து முறையான பாசன நீர் வினியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுத்து சமச்சீராக நீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. ேமலும் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் (நீர்வளத்துறை) காங்கயம்- வெள்ளகோவில் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Next Story
    ×