search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வால் பல்லடத்தில் விசைத்தறி உற்பத்தி குறைப்பு
    X

    கோப்புபடம். 

    மின் கட்டண உயர்வால் பல்லடத்தில் விசைத்தறி உற்பத்தி குறைப்பு

    • திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது. இவற்றில், தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன.
    • தமிழக அரசு கண்டுகொள்ளாததால், தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது. இவற்றில், தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. மின் கட்டண உயர்வு, மூலப் பொருள் விலை உயர்வு மற்றும் மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், சமீப நாட்களாக, விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காடா துணி உற்பத்தி சார்ந்த சிறு குறு தொழில் நிறுவனத்தினர், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தமிழக அரசு கண்டுகொள்ளாததால், தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:- பஞ்சு, நுால் உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட வங்கி கடனுக்கான வட்டி விகிதம், 6.25-ல் இருந்து, 9.75 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் பரிதவித்து வருகிறோம். இதுபோன்ற சூழலில், தமிழக அரசு, இதுவரை இல்லாத அளவு, 430 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தியுள்ளது தொழிலை மிகவும் பாதித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால், துணிகளின் விலையை நிர்ணயிக்க முடியாமல், 50 சதவீதம் மட்டுமே உற்பத்தி நடந்து வருகிறது. உற்பத்தியை குறைத்துள்ளதால், தொழிலாளர்கள் பலரை பண்டிகைக்கு முன்னதாவே ஊருக்கு அனுப்பி விட்டோம். வரும் நாட்களில், மீதமிருக்கிற தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்வதால், தீபாவளி பண்டிகைக்குப் பின் தொழிலின் நிலை எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×