search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன்   வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம். 

    தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

    • அனைத்து பிரிவினருக்கும் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
    • ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    படித்த முதல் தலைமுறையினரை தொழில் முனைவோராக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டம் என்ற திட்டத்தினை உருவாகியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் முதலாம் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

    அதன்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீதம் மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75 லட்சம்) நிதியுதவி வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீத மானியத்துடன் கூடுதலாக 10 சதவீத மானியம் (அதிகபட்ச உச்சவரம்பு ரூ.75 லட்சம்) வழங்கப்படும். மேலும் அனைத்து பிரிவினருக்கும் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணபிக்கும்போது பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினரான பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு வயது 45-க்குள் இருக்க வேண்டும்.

    கல்வித்தகுதியாக 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழிற்சார்ந்த பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொது பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் 5 சதவிகிதம் செலுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெற விரும்பும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அவினாசி சாலை, அனுப்பர்பாளையம்புதூர், திருப்பூர் என்ற முகவரியிலோ அல்லது 0421-2475007 மற்றும் 9500713022 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×