search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கல்நகரம் பகுதியில்  அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் - வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    கொங்கல்நகரம் பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் - வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

    • பெருங்கற்காலத்துக்கு பிறகு இரும்பு பயன்படுத்த துவங்கிய பின்னர் அவற்றை உருக்கி பல்வேறு ஆயுதங்கள் செய்துள்ளனர்.
    • விளைநிலத்தில் அமைந்துள்ள இந்த நெடுங்கல் தொன்மை வாய்ந்தது.

    உடுமலை:

    உடுமலை அருகே கொங்கல்நகரம், சோமவாரப்பட்டி, கோட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெருங்கற்காலத்தைச்சேர்ந்த தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச்சின்னங்கள் அமைந்துள்ளன.குறிப்பாக பெருங்கற்காலத்திலும், தென்கொங்கு பகுதி சிறப்பு பெற்றிருந்தது என்பதற்கு உதாரணமாக கொங்கல்நகரத்தில் 20 அடி உயர நெடுங்கல் காணப்படுகிறது.விளைநிலத்தில் அமைந்துள்ள இந்த நெடுங்கல் தொன்மை வாய்ந்தது.நெடுங்கல் என்பது பெருங்கற்கால ஈமச்சின்னத்தின் ஒரு வகையாகும்.இக்கல் இறந்தவர்கள் நினைவாகவோ அல்லது இறந்தவர்களைப்புதைத்த இடத்திலோ வைக்கப்படுகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அப்பகுதி முழுவதும் கல்திட்டைகளும், முதுமக்கள் தாழி உட்பட பெருங்கற்காலத்தை சேர்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.இந்த நெடுங்கல் பகுதியில், அகழாய்வு செய்வதன் வாயிலாக மதுரை கீழடி, கொடுமணல் உட்பட இடங்களில் முன்னோர்களின் நாகரீகம் கண்டறியப்பட்டது போல இப்பகுதியின் தொன்மையும் வெளிவரும்.இதில் தற்போது லேசான விரிசல் ஏற்பட்டு கல்லின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

    இதே போல் அருகில் உள்ள சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில் பகுதியில் கடந்த 2015ல் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வில் அகலமான வாயுடன் கூடிய சுடுமண் மண்பாண்டங்கள்,பச்சை நிற கல்மணிகள், உடைந்த சங்கு வளையல், வட்ட சுடுமண் சில்லு, சாணை பிடிக்கப்பட்டு தேய்ந்த கல்லின் எச்சம், சிதிலமடைந்த எடைக்கல், கருப்பு மற்றும் சிவப்பு மண்பாண்ட வண்ணப்பூச்சு மற்றும் வளைகோடுடைய உடைந்த ஓடுகளும் சேகரிக்கப்பட்டன.மேலும் பெருங்கற்காலத்துக்கு பிறகு இரும்பு பயன்படுத்த துவங்கிய பின்னர் அவற்றை உருக்கி பல்வேறு ஆயுதங்கள் செய்துள்ளனர்.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் கோட்டமங்கலம் பகுதியில் இரும்பு கசடுகள், மேற்பரப்பு ஆய்வில் அங்கு கண்டறியப்பட்டது.தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம் தெரியாமல் அவை பல வழிகளில் அழிக்கப்பட்டு வருகிறது.கோவை, திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கிய தென்கொங்கு நாட்டின் வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் கொங்கல்நகரம் பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×