என் மலர்
உள்ளூர் செய்திகள்
வடகிழக்கு பருவமழை சீரமைப்பு பணி - மின்வாரியத்தில் காலிபணியிடங்கள் நிரப்பப்படுமா?
- பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
- தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.
திருப்பூர்:
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் மின் கம்பிகள் அறுந்து விழுவது,மின்கம்பம் சாய்வது, மின் கம்பிகள் மீது மரக்கிளை, மரங்கள் விழுவது போன்ற காரணங்களால் மின் சப்ளை தடைபடும். இத்தகைய பிரச்சினைகளை உடனுக்குடன் எதிர்கொண்டு தடையில்லா மின் சப்ளை வழங்க ஒவ்வொரு மின் பகிர்மான கழக வட்டத்திற்கும் செயற் பொறியாளர் தலைமையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்பார்வையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவிற்கு உட்பட்ட இடத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு கூடுதல் பணியாளர்களின் உழைப்பு தேவைப்படும் போது, அருகேயுள்ள பிரிவில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும் என்றனர்.
திருப்பூர் தனி மாவட்டமாக இருந்தாலும் கோவை மண்டல மின் வாரிய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், உடுமலை, பல்லடம், நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியத்தால் ஒரு பிரிவிற்கு 14 கம்பியாளர், 14 உதவியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
ஒட்டு மொத்த கோவை மண்டலத்தில் மின்வாரியம் அனுமதித்துள்ள கம்பியாளர், உதவியாளர்கள் எண்ணிக்கை 5,921 பேர். ஆனால் பணியில் இருப்பவர்கள் வெறும் 482 பேர் மட்டுமே. 92 சதவீதம் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது என்ற புள்ளி விபரத்தை மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வெளியிட்டு பணியாளர் பற்றாக்குறையால் ஊழியர்கள் படும் சிரமத்தை விளக்கும் வீடியோவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.
இது குறித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையால், பணிபுரியும் ஊழியர்களுக்கு மன உளைச்சல அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.