என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆயுத பூஜையையொட்டி திருப்பூரில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள பூசணிக்காய்
- பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பனியன் நிறுவனங்களில் இருந்தும் பலர் இவற்றை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
- ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:
ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. ஆயுத பூஜையின் போது வீடுகள், பனியன் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வாகனங்களுக்கு பூஜை போடுவதற்கும், திருஷ்டி கழிப்பதற்கும் பூசணிக்காய் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வழக்கம். இதனால் திருப்பூருக்கு தற்போது பெருந்துறை மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூசணிக்காய் விற்பனைக்காக அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, பெருமாள் கோவில் வீதி உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் இவை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பனியன் நிறுவனங்களில் இருந்தும் பலர் இவற்றை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதேபோல் வெள்ளரி பழமும் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூ வரத்து அதிகரிக்க ெதாடங்கியுள்ளது. இதில் செவ்வந்தி நாட்டு ரகம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டு ரகம் ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் பிற பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று ரூ.520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஜாதிமல்லி ரூ.320, சம்பங்கி ரூ.120, பட்டுப்பூ ரூ.80, அரளி ரூ.220 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ள போதிலும் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. செவ்வந்தி பூவின் வரத்து அதிகமாக இருப்பதால் இதன் விலை பெரிய அளவில் உயரவில்லை.