search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் மாவட்டத்தில்  ரூ.2.53 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல்
    X
    கோப்புபடம். 

    திருப்பூா் மாவட்டத்தில் ரூ.2.53 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல்

    • தீபாவளி பண்டிகையையொட்டி, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் கதா் விற்பனையைத் தொடங்கியுள்ளோம் என்று கூறினார்.
    • 52 நெசவாளா்களுக்கு நேரடியாகவும், சுமாா் 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது

    திருப்பூர்:

    திருப்பூா் குமாா் நகா் கதா் அங்காடி வளாகத்தில் காந்தியடிகள் பிறந்தநாள் விழா மற்றும் கதா் சிறப்பு விற்பனை தொடக்கவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர், காந்தியடிகளின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அனைத்து கதா், பட்டு மற்றும் பாலியஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

    பல ஆயிரம் கிராமங்களைக் கொண்ட நமது நாட்டில், விவசாயத் தொழிலில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முடிகிறது. மீதமுள்ள நாள்களில் உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு நூல் நூற்பு, நெசவு மற்றும் சோப்பு தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தச்சு உள்ளிட்ட கிராமத் தொழில்களில் வருவாய் ஈட்டவும், கிராமப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் காந்தியடிகளால் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த கதா் கிராமத் தொழில் திட்டங்கள்.

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் 7 கதா் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 346 பெண் நூற்பாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ப்பட்டு, ரூ. 60.89 லட்சம் மதிப்பிலான கதா் மற்றும் பாலியஸ்டா் நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், 52 நெசவாளா்களுக்கு நேரடியாகவும், சுமாா் 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 1.27 கோடி மதிப்பிலான கதா் மற்றும் பாலியஸ்டா் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் மற்றும் அவிநாசியில் செயல்படும் 2 காதி கிராப்ட்கள் மூலம் 2021- 22 ஆம் ஆண்டுக்கு ரூ. 2.53 கோடி கதா் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், ரூ. 1.76 கோடிக்கு கதா் பட்டு மற்றும் பாலியஸ்டா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாவட்டத்தில் 2022- 23 ஆம் ஆண்டில் ரூ. 2.53 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் கதா் விற்பனையைத் தொடங்கியுள்ளோம் என்று கூறினார். நிகழ்ச்சியில், கதா் கிராம தொழில்கள் உதவி இயக்குநா் வி.வி. ரவிக்குமாா், மொழிப்போா் தியாகிகளின் வாரிசுதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    Next Story
    ×