search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்திருப்பூர் மாநகராட்சி மேயர்-ஆணையர் அறிவிப்பு
    X

    கோப்பு படம்.

    அனுமதியின்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்திருப்பூர் மாநகராட்சி மேயர்-ஆணையர் அறிவிப்பு

    • செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான கழிவுநீர் மேலாண்மை முறைபடுத்துதல் சட்டம் 2022-ஐ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை அடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட துறையின் அரசாணை வெளியிடப்பட்டதில் திருப்பூர் மாநகர பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் கழிவுநீர் வாகனங்கள் திருப்பூர் மாநகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனங்களின் தினசரி செயல்பாட்டினை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தில் மேற்கண்ட கருவியினை பொருத்திக்கொள்வது கட்டாயமாகும். மேலும் மாநகராட்சி அனுமதி பெறாத வாகனங்கள் 30.6.2023 முதல் மாநகராட்சி எல்லைக்குள் இயக்க அனுமதிக்கப்படமாட்டாது. தவறும் பட்சத்தில் மேற்படி அனுமதி பெறாத வாகனங்கள் மாநகராட்சிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீரினை திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரேற்று நிலையத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் மட்டுமே கழிவுநீரினை விட வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை இயந்திரங்களின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், மாநகராட்சி மைய அலுவலகத்தில் கழிவுநீர் மேலாண்மை திட்டம் மற்றும் பாதாளசாக்கடை திட்டங்களுக்கென்று "14420" என்ற கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் கால்வாய்களில் எற்படும் அடைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்புகள் தொடர்பான புகார்கள் இவ்வழைப்பு மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் பதிவுகள் மற்றும் புகார்களை பதிவு செய்து கொள்ளவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கசடு கழிவுநீர் சுத்தம் செய்ய பெறப்படும் அழைப்புகள் இம்மாநகராட்சியில் பதிவு பெற்ற கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கு உடனடியாக தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இப்பணிகளில் ஈடுபடும் கள பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி அவர்களுக்கு காப்பீட்டு வசதியும் செய்து தருவது சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் பொறுப்பாகும். வாகனங்கள் கழிவுநீரேற்று நிலைய வளாகத்திற்குள் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பொது மக்கள் தங்கள் சந்தேகங்களை இம்மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 14420 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தி க்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×