search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பைகள் கொட்டுவதை தடுக்க பி.ஏ.பி. கால்வாயில்  கம்பி வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா?
    X

    கோப்புபடம்.

    குப்பைகள் கொட்டுவதை தடுக்க பி.ஏ.பி. கால்வாயில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா?

    • இரண்டாம் மண்டல பாசனத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.
    • கால்வாய் ஷட்டர்களில் கழிவுகள் தேங்கி தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக நான்கு மண்டலங்களில் 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வரும் இரண்டாம் மண்டல பாசனத்தில் இந்த வாய்க்காலில் 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

    இந்த கால்வாயில் போடிபட்டி, பள்ளபாளையம், அரசு கலைக்கல்லூரி பின்பகுதி, கணக்கம்பாளையம், எஸ்.வி., புரம், எஸ்.வி., மில் உட்பட பகுதிகளில், கால்வாயில் அனைத்து வகையான குப்பையும் கொட்டப்படுகிறது.குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால் கால்வாயே காணாமல் போகும் அவல நிலையில் உள்ளது. பாசனத்துக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது இத்தகைய குப்பை விளைநிலத்தில் தேங்குவதுடன், மண் வளத்தையும் பாதித்து வருகிறது. மேலும் பகிர்மான கால்வாய் ஷட்டர்களில் கழிவுகள் தேங்கி தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.

    பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் பொதுப்பணித்துறை சார்பில் அவசர கதியில் உடுமலை வாய்க்காலில் உள்ள குப்பை அகற்றப்படுகின்றன.நீர் நிர்வாகம் மற்றும் மண் வளத்தை பாதிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறை சார்பில் கால்வாயில், குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டது. திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாசன திட்டத்தை பாதுகாக்க உடனடியாக அரசு நிதி ஒதுக்கி நடப்பு சீசனில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×