search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக பூஜை பொருட்கள்- சிலைகளை ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்
    X

    பொதுமக்கள் ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை வாங்கும் காட்சி.

    விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக பூஜை பொருட்கள்- சிலைகளை ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்

    • இந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.
    • களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை 31ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.

    பக்தர்கள் வீடுகளில், களி மண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வைத்து மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், அவல் பொரி உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து வழிபடுவார்கள். வழிபாட்டுக்கு வைக்கப்படும் மண் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக எளிதில் கரையும் வகையிலான களிமண் சிலைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.இதையடுத்து களிமண் விநாயகர் சிலைகள் திருப்பூரில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சதுர்த்தி வழிபாட்டுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கான வழிபாட்டு பொருட்கள், சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,2ஆண்டுகளாக, ஊரடங்கால் விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந் தாண்டு உற்சாகத்துடன் கொண்டாட தயாராகிவிட்டனர். களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.கலர் செய்யப்படாத மண் சிலைகள், இயற்கையான காவி பூசிய சிலைகள், விதை விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன என்றனர். திருப்பூர் கொங்கு மெயின்ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பலர் கடைகளில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். அலகுமலை பகுதியில் தயாரிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பூஜைக்கு தேவையான வெற்றிலை, பாக்கு, இலை, பிரசாதம் செய்வதற்கான பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் பலர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் குவிந்தனர். இது மட்டுமின்றி பூக்களும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 3 தினங்களுக்கு முன் கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முல்லை கிலோ 400, அரளி 200, செவ்வந்தி 120, சம்பங்கி 150 ரூபாய்க்கு விற்கிறது. பூ வியாபாரிகள் கூறுகையில், பூ வரத்து அதிகமாகி, சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், அவ்வப்போது மழை மிரட்டுவதால் பூக்களை வாங்கி இருப்பு வைக்க தயக்கமாக உள்ளது. இருப்பினும் நாளை (31ந் தேதி) விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினம் இணைந்து வருவதால், பூ விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    Next Story
    ×