search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குளுக்கோஸ் இருப்பு இல்லையென கூறி கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு - பெண்கள் பரபரப்பு புகார்
    X

     கோவில்வழி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

    திருப்பூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குளுக்கோஸ் இருப்பு இல்லையென கூறி கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு - பெண்கள் பரபரப்பு புகார்

    • கர்ப்பிணிகளுக்கு ஜிடிடி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செய்யப்படுகிறது.
    • 4 மாதம் முடிந்து 5-வது மாத கருவைச் சுமந்து வரும் கர்ப்பிணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனைக்கு செல்லும், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய குளுகோஸ் இல்லை என பல வாரங்களாக திருப்பி அனுப்பப்படுவதால், கர்ப்பிணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    திருப்பூர் கோவில்வழியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கு ஜிடிடி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செய்யப்படுகிறது. இந்த சோதனைக்கு வரக்கூடிய கர்ப்பிணிகளுக்கு குளுகோஸ் சாப்பிடுவதற்கு கொடுக்கப்படும். அதை சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு கணக்கிடப்படும். இந்த சோதனையை செய்வதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை துல்லியமாக கண்டறிவதுடன், அதற்குரிய மருந்துகளும் வழங்கப்படும். இந்த சோதனையை மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் கருக் கலைப்பு ஆவதை தடுக்க முடியும், வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஏற்படக்கூடிய இதர பாதிப்புகளையும் முன்கூட்டியே தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    இந்நிலையில் கோவில்வழியைச் சேர்ந்த 22 வயது, கர்ப்பிணி குளுகோஸ் ரத்த பரிசோதனை செய்வதற்காக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அங்குள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு குளுகோஸ் இருப்பு இல்லை, புதிதாக வந்தால்தான் கொடுக்க முடியும் என்று கூறி ரத்தபரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டனர். அவருடன் அவரைப் போலவே பலரையும் திருப்பி அனுப்பினர். அதன் பிறகு ஒரு வார காலம் கழித்து மீண்டும் அங்கு போயிருக்கிறார். அப்போதும் குளுகோஸ் வரவில்லை என்று அங்கிருந்த செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். எப்போது குளுகோஸ் வரும், எப்போது ரத்த பரிசோதனை செய்ய வர வேண்டும் என கர்ப்பிணிகள் கேட்டபோது அவர்களிடம் உரிய பதில் இல்லை. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி, கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 22 வயது கர்ப்பிணி உட்பட சிலர் சென்றனர். அப்போதும் குளூகோஸ் இல்லை என தெரிவித்து திருப்பி அனுப்பிவிட்டனர்.

    இது தொடர்பாக கர்ப்பிணிகளின் கணவன்மார்கள் கூறும்போது, " தற்போது 4 மாதம் முடிந்து 5-வது மாத கருவைச் சுமந்து வரும் கர்ப்பிணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சர்க்கரை அளவை கணிக்கும் குளுகோஸ் ரத்தப் பரி சோதனை செய்வார்கள் எனத் தெரியவில்லை. திருப்பூர் மாநகர் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. அரசு மருத்துவமனையின் சின்னச்சின்ன விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினாலே பொதுமக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும்" என்றனர்.

    Next Story
    ×