search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயத்த ஆடை பூங்கா-மெட்ரோ ரெயில் திட்டம் - பின்னலாடை துறையினரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுமா?
    X

    கோப்புபடம்.

    ஆயத்த ஆடை பூங்கா-மெட்ரோ ரெயில் திட்டம் - பின்னலாடை துறையினரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுமா?

    • மெட்ரோ ரெயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில் திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.
    • இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பின்னலாடை தொழில் அமைப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) தலைவர் ரத்தினசாமி அளித்த மனுவில்,கோவை உக்கடத்திலிருந்து, அவிநாசி மார்க்கமாக, விமானநிலையம், கணியூர் வரையிலும், பல்லடம் மார்க்கத்தில் உக்கடத்திலிருந்து காரணம்பேட்டை வரை மெட்ரோ ெரயில் சேவை தொடங்க தமிழக அரசால் உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ெரயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில், கணியூரில் இருந்தும், காரணம் பேட்டை, சாமளாபுரம் வழியாக திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.

    உலகளவில் புகழ் பெற்ற பின்னலாடை நகரம் திருப்பூர். கோவையில் இருந்து திருப்பூருக்கும், திருப்பூரிலிருந்து கோவைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து செல்கின்றனர். கோவை - திருப்பூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ெரயில் இயக்கினால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெறும்.

    சாமளாபுரத்தில் இருந்து நொய்யலாற்றின் மேல் மெட்ரோ ெரயில் திட்டம் அமைந்தால் நில ஆர்ஜிதம் செய்வது சுலபமாகும். இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும். விபத்து தவிர்க்கப்படும். பயண நேரம் குறையும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதனுடன் கோவை - திருப்பூர் இடையே மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பது குறித்த மாதிரி வரைபடத்தையும் அவர் இணைத்துள்ளார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் அளித்த மனுவில்,பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் உள்ள குறு, சிறு நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. நூல் விலை உயர்வால் ஆடை தயாரிப்பு செலவினம் அதிகரித்துள்ளது. உற்பத்தி பிரிவில், 50 சதவீதம் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்கிறது.வடமாநில தொழிலாளரை சார்ந்தே நிறுவனங்களை இயக்கவேண்டியுள்ளது. திருப்பூர் முழுவதும் மூன்று லட்சம் வடமாநில தொழிலாளர் உள்ளனர். ஒரு தொழிலாளருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 300 கோடி ரூபாய் திருப்பூரிலிருந்து வெளிமாநிலத்துக்கு செல்கிறது.

    டீமா சங்கம் சார்பில் அரசு உதவியுடன் வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுகிறது. இதில், உள்ளூரை சேர்ந்த 10 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். தமிழகத்தில் தொழிலாளர் மிகுந்த மாவட்டங்களில் ஆயத்த ஆடை பூங்காக்களை அமைத்தால் வேலைவாய்ப்பு பெருகும், மாநில பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.தொழிலாளர் நலன், தொழில் நலன் கருதி, டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணிக்கு மேல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பருத்தி கொள்முதல் மையம், பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைப்பது அவசியம். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது. ஆயிரத்து 200 தென்னை விவசாயிகள் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.

    தென்னையிலிருந்து கிடைக்கும் நீரா பானத்தை, அதன் தன்மை மாறாமல் பேக்கிங் செய்து மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம். தென்னையிலிருந்து பெறப்படும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்கள் அடங்கிய நீரா பானத்தை, தென்னீரா என்ற பெயரில் விற்று வருகிறோம்.கேரள மாநிலம் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகரித்த தென்னீராபானத்தை, அரசு பானமாக அறிவித்து முதல்வர் அலுவலகம் மற்றும் அமைச்சரவையில் வரவேற்பு பானமாக பயன்படுத்த வேண்டும்.ஆரம்ப சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். நீரா பானம் இறக்குவதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×