search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி பகுதியில் சாலையோர கடைகளை  ஒழுங்குப்படுத்த வேண்டும் - கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    அவினாசி பகுதியில் சாலையோர கடைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் - கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    • குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
    • குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

    அவினாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள்படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):- கடந்த ஒரு ஆண்டாக சந்தை வசூல் யார் செய்கிறார்கள். இதுவரை எவ்வளவு தொகை உள்ளது. அவினாசி நகரில் புது பஸ் நிலையம் முதல் செங்காடு திடல் வரை ரோட்டோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 3 மாதத்தில் 25 விபத்துகள் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கை கால்கள் ஊனமடைகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்துடன் வருவாய்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைதுறை ஆகியவை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தலைவர்:- ரோட்டோர கடைக்காரர்களிடம் சொன்னால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கிறது.நாங்கள் இதை வைத்துதான் ஜீவனம் செய்கிறோம் என்கின்றனர்.

    திருமுருகநாதன்(11-வது வார்டு):- காமராஜ் வீதியில் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 2 வாரத்திற்குள் மட்டும்அவினாசியில் 20 ரோட்டோர கடைகள் அதிகரித்துள்ளது. ரோட்டோர கடைகளால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ரோட்டோர ஆக்ரமிப்பு கடைகள்குறித்து ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே இதை ஒழுங்குபடுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள் குப்பை எடுக்கும் நேரம் என்ன ? வார்டு முழுவதும் சுத்தம் செய்வதில்லை. குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கருணாம்பாள்( 8-வது வார்டு):- வள்ளுவர் வீதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடிமகன்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு மது அருந்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஸ்ரீதேவி( 18 -வது வார்டு):- அவினாசி சந்தைபேட்டை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளது. இங்கு மத்தியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதற்கு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும். அவினாசிலிங்கம்பாளையம் செல்லும் ரோட்டில் 2, 3, 4, 5- வது வீதிகளில் சாக்கடை கால்வாய் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாக்கடை நீர் குட்டை போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றார்

    தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி:- நான் பேரூராட்சி தலைவராகிய நாள் முதல் தூய்மை இந்தியா திட்டம் 2.0,கலைஞர் நகர் புற சாலைகள் மேம்படுத்த திட்டம், நமக்கு நாமே திட்டம், இலங்கை தமிழர் வாழ்க்கை தர மேம்பாட்டு நிதி, நபார்டு மூலதன மானிய திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ,மாநில கட்டமைப்புவளர்ச்சி நிதி, சிறுகனிம வருவாய் மானியம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தேசியநகர்ப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாக 13 கோடியே 23 லட்சத்திற்கும், பேரூராட்சி பகுதியில் ஒரு கோடியே 45 லட்சத்திற்கும் என மொத்தம் 14 கோடியே 68 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பேரூராட்சியின் 13.3.2023பொது நிதி இருப்பு விவரம் 3 கோடியே 54 லட்சத்து 18 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்ததை தற்போது நாளது தேதியில் 48 லட்சத்து 61 ஆயிரத்து 509 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சியில் தேவையற்ற செலவுகளை குறைத்து பேரூராட்சி நிதி நிலையை பெருக்கியுள்ளோம். பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் பட்டியலில் தமிழகத்திலேயே அவினாசி பேரூராட்சி முதல் இடத்தில் உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என்றார்.

    Next Story
    ×