search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் - பல்லடம் நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் - பல்லடம் நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

    • 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
    • குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர்களை தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள்,மற்றும் கழிவு நீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. உரிய உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிட்டுள்ளபடி நேரம்,வழித்தடம் ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்ட படி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 2வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தல் அல்லது ரத்து செய்வதோடு, குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது. அகற்றப்படும் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யா விட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் குற்றவியல் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×