search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
    X

    புனித கேத்தரின் அம்மாள் ஆலயத்தில் பங்குத்தந்தை ஹைசிந்த் தலைமையில், சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை ஆயர் ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சபை மக்கள் திரளாக கலந்து கொண்ட காட்சி.

    திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    • தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.
    • குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர்.

    திருப்பூர் :

    உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.

    நள்ளிரவு 12 மணிக்கு மாட்டுத் தொழுவத்தின் தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்ட குடில் அலங்காரத்தில், குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர். சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்தப்பட்டது. திருப்பூரில் புனித கேத்தரீன் சர்ச், புனித பவுல், ஏ.ஜி., ஆலயம், கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயம், அவிநாசி புனித தோமையார், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம்,பல்லடம் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், சி.எஸ்.ஐ., புனித ஜான் ஆலயம் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் அந்த ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டன.

    மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, காங்கயம், வெள்ளக்கோவிலில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.உடுமலை நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், சிஎஸ்ஐ. இம்மானுவேல் தேவாலயம் ஆகியவற்றில் அதிகாலை கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 8.30 மணிக்கு இரண்டாம் ஆராதனை நடந்தது. இதேபோல பிற தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.மேலும் கிறிஸ்தவா்களின் வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    காங்கயம் நகரம் கரூா் சாலையில் உள்ள குறைகள் தீா்க்கும் குழந்தை மாதா அருள்தலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடந்தது. தொடா்ந்து குழந்தை இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் குழந்தை இயேசுவை குடிலில் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் கூட்டுத் திருப்பலி , சிறப்புத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா். நாட்டில் அமைதியும், அன்பும் நிலவ வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதேபோல காங்கயம் களிமேடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. இயேசு ரட்சகா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் வழிபாடு நடந்தது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் நண்பர்கள், உறவினர்கள், ஏழைகளுக்கு கேக் மற்றும் உணவுகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. தேவாலய குருக்களும், மக்களும் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றவர்களை சந்தித்து ஆடை, உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர்.

    Next Story
    ×