என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெர்மனி ஆடை வர்த்தக வாய்ப்பை கைப்பற்ற தயாராகும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்
- இந்தியா - ஜெர்மனி உடனான ஏற்றுமதி வர்த்தகம் சீராக இருக்கிறது.
- ஏற்றுமதியாளர் - வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெர்லின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 11.41 சதவீத சரிவை சந்தித்துள்ளது.இந்திய ஆயத்த ஆடை ரகங்களுக்கு ஐரோப்பா, அமெரிக்கா மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாக உள்ளன. கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி 2021 வரை நீடித்த கொரோனா பெருந்தொற்று உலகளாவிய நாட்டு மக்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தையும், பொருட்கள் நுகர்விலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர், சர்வதேச சந்தை, இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக உலகளாவிய ஆயத்த ஆடை வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாட்டு வர்த்தகர்கள், ஆடை இறக்குமதியை குறைத்துள்ளனர். மக்களின் சிக்கன நடவடிக்கை, உணவு முதலான அடிப்படை தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, வெளிநாடுகளில் ஆடை நுகர்வை குறையச் செய்துள்ளது.இதன் எதிரொலியாக இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த சில மாதங்களாகவே தொடர் சரிவு நிலையை சந்தித்துவருகிறது. நடப்பு நிதியாண்டிலும், ஆடை ஏற்றுமதி எதிர்பார்த்த அளவில் எழுச்சி பெறவில்லை. ஏற்றுமதி வர்த்தக மதிப்பு மாதந்தோறும் சரிந்துகொண்டே செல்கிறது.
கடந்த 2022 ஜூலை மாதம் 10,994 கோடி ரூபாயாக இருந்த நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பாண்டு ஜூலை மாதம் 9,375 கோடி ரூபாயாக குறைந்தது. அதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9,815 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதம் 9,382 கோடியாக 4.42 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் 49,133 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் முதல் 5 மாதங்களில், 55,463 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 5மாதங்களில் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 11.41 சதவீதமும்,டாலரில் கணக்கிடும்போது 15.98 சதவீதமும் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிந்துள்ளது.
இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-
வழக்கமாக ஒரு நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டால் மற்றொரு நாட்டுக்கான வர்த்தகம் அதிகரிக்கும். ஆனால் தற்போது, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நமது நாடு மட்டுமல்ல, சீனா போன்ற மற்ற நாடுகளின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. பல நாடுகளில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளது; இதனால் மக்களின் ஆடை நுகர்வு குறைந்துள்ளது.அதற்காக பேஷன் ஆடை மீதான மக்களின் மோகம் குறையவில்லை. சற்று விலை குறைவான ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மாறினால் சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.இவ்வாறு சபரிகிரீஷ் கூறினார்.
இந்தநிலையில் திருப்பூருக்கான புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை அள்ளியெடுக்க, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடக்கும் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் வரிசையில், உலக அளவில் அதிக ஆடை இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக திகழ்வது ஜெர்மனி. அந்நாட்டின் மொத்த இறக்குமதியில், இந்தியாவில் பங்களிப்பு 4 சதவீதம் மட்டுமே. ஐரோப்பிய சந்தை வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஜெர்மனியுடன் கூடுதல் வர்த்தக தொடர்பை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. கொரோனா உள்ளிட்ட பேரிடர் இருந்தாலும் கூட கடந்த 5 ஆண்டுகளாக, இந்திய -ஜெர்மனி இடையேயான வர்த்தகம் நிலையாக இருக்கிறது. சீனா, வங்கதேச நாடுகள், ஜெர்மனி இறக்குமதி வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கின்றன. துருக்கி, வியட்நாமிற்கு அடுத்தபடியாக, இந்தியா ஐந்தாவது இறக்குமதி நாடாக இருக்கிறது.சீனாவின் பங்களிப்பு 23.16 சதவீதம், வங்கதேசத்தின் பங்களிப்பு 21 சதவீதம், இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதம் மட்டுமே. இனிவரும் நாட்களில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா பேரிடர் இருந்தும் ஜெர்மனி உடனான, இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கவில்லை. உக்ரைன் - ரஷ்யா போர் சூழல் காரணமாக மந்தமாக இருந்தாலும், ஏராளமான வர்த்தக வாய்ப்பு, ஜெர்மனியில் கொட்டிக் கிடக்கின்றன. இந்திய ஏற்றுமதியாளர்கள், புதிய வர்த்தக வாய்ப்புகளை அள்ளியெடுக்க வசதியாக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஏற்றுமதியாளர் மற்றும் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:-
இந்தியா - ஜெர்மனி உடனான ஏற்றுமதி வர்த்தகம் சீராக இருக்கிறது. பொருளாதார மந்தநிலையில் இருந்து ஜெர்மனி எளிதில் மீண்டுவிட்டது. இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. புதிய வர்த்தக வளர்ச்சி இலக்கை எட்டும் வகையில் ஏற்றுமதியாளர் - வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெர்லின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி என, இரண்டு நாட்கள் நடக்கும், வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியில், திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று புதிய வர்த்தக வாய்ப்புகளை பெறலாம்.
விவரங்களுக்கு, ஏ.இ.பி.சி., அலுவலகத்தை 99441 81001, 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்