search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை - ஆனைமலை சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
    X

    சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை படத்தில் காணலாம்.

    உடுமலை - ஆனைமலை சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

    • பழனி - ஆனைமலை பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக சாலை சேதம் அடைந்து வருகிறது.

    உடுமலை :

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா வண்டி வாய்க்கால் பிரிவில் இருந்து நெய்க்காரப்பட்டி, கொழுமம், கொமரலிங்கம், குறிச்சிக்கோட்டை, தளி, எரிசனம்பட்டி, நா.மு.சுங்கம் வழியாக ஆனைமலைக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக ஆனைமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் ஆழியாறு, திருமூர்த்திமலை, அமராவதி, மூணாறுக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர். அத்துடன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இடுபொருட்கள் மற்றும் விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகளும் பழனி- ஆனைமலை பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலையில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது. இந்த சூழலில் குறிச்சிக்கோட்டை குளத்துபுதூருக்கு இடைப்பட்ட பகுதியில் குருவப்ப நாயக்கனூர் பிரிவுக்கு அருகே ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக சாலை சேதம் அடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில்:-

    சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொது மக்களுக்கு பழனி-ஆனைமலை சாலை வரப்பிரசாதமாகும். இதன் மூலமாக பல்வேறு தேவைகளை தொய்வின்றி பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் குருப்பநாயக்கனூர் பிரிவிற்கு மேற்குபுறம் உள்ள வளைவிலும் மற்றும் கிழக்கு புறமாகவும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏராளமான குடிநீர் வீணாகி வருவதுடன் சாலையும் படிப்படியாக சேதம் அடைந்து பகுதி அளவுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் உடைப்பின் வழியாக அங்கு தேங்கி உள்ள கழிவுநீர் குடிநீருடன் கலந்து சென்று பொது மக்களுக்கு தொற்று நோய்களையும் ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஓராண்டாக குழாய் உடைப்பையும் சேதமடைந்த சாலையையும் சீரமைக்கக் கோரி போராடி வருகிறோம். மேலும் தண்ணீர் வீணாவதால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இந்த வழியாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் சென்று வருகின்றனர்.ஆனால் அந்த உடைப்பை சீரமைத்து பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே பழனி - ஆனைமலை பிரதான சாலையில் குறிச்சிக்கோட்டை - குளத்துப்புதூருக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட குடிநீர் குழாயை உடைப்பை சீரமைத்து சேதமடைந்த சாலையையும் புதுப்பித்து தருவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×