search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    X

    இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    • அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் 2-வது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
    • அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்றார்.

    சென்னை:

    அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது மாநாட்டில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஏப்ரல் 3-ம் நாள் நடைபெற்ற முதல் மாநாட்டைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது மாநாட்டிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

    சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் நான் பங்கெடுத்து உரையாற்றுகிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் சமூகநீதியைத்தான் இயக்கத்தின் இலக்கணமாக வைத்துள்ளது. இந்த இயக்கம் உருவாகக் காரணமே சமூகநீதிதான். சமூகநீதி – சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது.

    தமிழ்நாட்டைப் பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூகநீதியை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்கியது மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியதும் திராவிட இயக்கம்தான்.

    தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் காரணமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதன்முறையாக திருத்தப்பட்டது.

    சமூகநீதியை நிலைநாட்ட நாம் போராடி வந்தாலும் – சமூகநீதிக்கான தடைகளும் விழவே செய்கின்றன. இதில் பா.ஜ.க. பெரிய அளவிலான தடுப்புச் செயல்களை செய்து வருகிறது.

    சமூகநீதியை முறையாக பா.ஜ.க. அமல்படுத்துவது இல்லை. கடந்த 9 ஆண்டுகாலத்தில் ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்கள்.

    இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சில மாநிலங்களில் 50 விழுக்காடு உள்ளது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். எனவே, 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு அளவீடு போகக் கூடாது என்று சொல்வதும் சரியல்ல. "இடஒதுக்கீடு" மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும்.

    இந்தியாவில் உண்மையான கூட்டாட்சிக் கருத்தியல் மலர்ந்தாக வேண்டும். நாம் மேற்கண்ட "சமூகநீதி" தீர்மானங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க உழைப்போம். இந்திய நாட்டு மக்கள் அனைவரும் சமூகநீதிப் பெருவாழ்வு வாழப் பாடுபடுவோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×