search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுங்கச்சாவடி கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்வு
    X

    சுங்கச்சாவடி கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்வு

    • நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    சென்னை:

    'தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்கிறது' என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    அதில் சுமார் 30 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியிலும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்தும் சுங்கக்கட்டணம் உயர்த்தும் நடைமுறை உள்ளது. அதன்படி வருகிற 1-ந்தேதியில் இருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயரும் எனக் கூறப்படுகிறது.

    இதன்படி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, அரியலூர் மாவட்டம் மணகெதி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம் கரியந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    வாகனங்களின் வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலைத் துறை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    இந்த கட்டண உயர்வால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்று வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×