என் மலர்
உள்ளூர் செய்திகள்
நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைவு
- 2022-ம் ஆண்டுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
- கடந்தாண்டு மே மாதம் முதல் இ-பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுவது புள்ளி விவரங்கள் வாயிலாக தெரிய வந்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.
தொடர்ந்து 2022-ம் ஆண்டுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
அதிலும் குறிப்பாக 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 28 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றது தெரியவந்து உள்ளது.
இது கடந்த 2022-ம்ஆண்டை காட்டிலும் 4 லட்சம் அதிகம்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு மே மாதம் முதல் இ-பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2023-ம் ஆண்டு டன் ஒப்பிடுகையில் கடந்தாண்டில் நீலகிரிக்கு சுமார் 4 லட்சம் பயணிகள் குறைவாக வருகை தந்து உள்ளது தெரியவந்து உள்ளது.
அதாவது கடந்த 2024 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 31-ந்தேதிவரை, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 23 லட்சத்து 95 ஆயிரத்து 894 பயணிகள் மட்டுமே வந்து உள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை சார்ந்து செயல்படும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக நீலகிரி சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பேர் சுற்றுலா வருகின்றனர். ஆனால் இங்கு பயணிகளுக்கான சுற்றுலா திட்டம் இதுவரை வரையறுக்கப்படவில்லை. ஊட்டியை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் குன்னூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். மேலும் மருத்துவம், விளையாட்டு சுற்றுலாக்களையும் திட்டமிடுவது அவசியம்.
ஊட்டியில் நிரந்தர பொருட்காட்சி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கருத்தரங்குகளை நடத்துவதற்காக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஊட்டியில் ரோஜா பூங்காவுக்கு பிறகு சுற்றுலா தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. மேலும் சுற்றுலா பயணிகளை கவர ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து பொருளாதாரமும் உயர வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி இருப்பவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் உள்ளூர் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த வணிகத்தில் 45 சதவீதத்துக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இ-பாஸ் முறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டு மென கோரிக்கை விடுத்து உள்ளனர்.