என் மலர்
உள்ளூர் செய்திகள்
புத்தாண்டை கொண்டாட ஊட்டியில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்
- சுற்றுலா தலங்களில் கூட்டம் களைகட்டி உள்ளது.
- சுற்றுலா விடுதிகள் புத்தாண்டுக்கு முன்பாகவே முன்பதிவுசெய்யப்பட்டு விட்டன.
ஊட்டி:
உலகம் முழுவதும் இன்றிரவு 12 மணிக்கு 2025 புத்தாண்டு பிறக்கிறது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் களைகட்டி உள்ளது.
அதிலும் குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகிய பகுதிகளில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர்.
நாளை புத்தாண்டு என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவை புத்தாண்டுக்கு முன்பாகவே முன்பதிவுசெய்யப்பட்டு விட்டன. மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் அங்குள்ள விடுதிகளின் அறைகள் நிரம்பி வழிகின்றன.
இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் லாட்ஜ்களில் தங்கி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் சுற்றுலா வாகனங்கள் மூலம் குன்னூர், ஊட்டிக்கு வந்திருந்து அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதனிடையே நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது களைகட்டி காணப்படுகின்றன. மேலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ரெயில் நிலையத்தில் காத்திருந்து மலைரெயிலில் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் அங்குள்ள வியாபார கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.