search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் வேதாந்தா நிறுவனம்- 4-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் வேதாந்தா நிறுவனம்- 4-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

    • ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மக்களின் எதிர்ப்பு, அரசின் உத்தரவால் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த தொழிற்சாலையில் ரிபைனரி, காப்பர் ராட் பிளான்ட், 160 எம்.டபிள்யூ.கேப்டிவ் பவர் பிளாண்ட், சல்பரிக் ஆசிட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் நச்சு புகைகளால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    தொடர்ந்து ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    100-வது நாளான மே 22-ந் தேதி போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.

    அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு அதே ஆண்டு மே 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.

    இந்நிலையில் மூடப்பட்ட ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதனிடையே பராமரிப்பு பணிக்காக சில மாதங்கள் திறக்க அனுமதி கோரி புதிதாக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கொரோனா 2-ம் அலையில் ஏராளமானவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்ததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் 3 மாதம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 3 மாதங்கள் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்றது. பின்னர் காலஅவகாசம் முடிந்ததால் மீண்டும் ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

    மக்களின் எதிர்ப்பு, அரசின் உத்தரவால் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆலையை திறக்க மனு தாக்கல் செய்த போதும் அதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    வேதாந்தா நிறுவனம் ஆயில், கேஸ், ஜின்க், லீட், சில்வர், காப்பர், இரும்புத்தாது, ஸ்டீல், அலுமினியம் மற்றும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

    வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடியில் உள்ள நவீன ஸ்மெல்டர், ரிபைனிங் காம்ப்ளக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்படி வேதாந்தா, ஆக்சிஸ் கேபிடல் உடன் இணைந்து ஸமெல்டர் காம்ப்ளக்ஸ் (முதன்மை மற்றும் 2-ம் நிலை), சல்பரிக் ஆசிட் தொழிற்சாலை, காப்பர் ரிபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட், எப்ளூயன்ட் டிரீட்மென்ட் பிளான்ட், கேப்டிவ் பவர் பிளான்ட், ஆர்.ஓ. யூனிட்கள், ஆக்சிஜன் ஜெனரேஷன் யூனிட், வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வளாகம் ஆகிய 10 வகையான யூனிட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆர்வமுள்ள பொருளாதார திறன் கொண்ட தரப்பினர் அடுத்த மாதம் 4-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×