search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு
    X

    கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு

    • ஊராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும்.

    குழித்துறை:

    தமிழக-கேரளா எல்லைப்பகுதி வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.

    அடிக்கடி கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் காலியான சரக்கு வாகன ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த மாநிலத்தில் இருந்து மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் அவலநிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் அவ்வப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கழிவுகள் கொட்டி வரும் சம்பவம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் குமரி-கேரளா எல்லை சோதனை சாவடி வழியாக நள்ளிரவில் கேரளாவில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் புழுக்களுடன் இறைச்சி கழிவுகள் ஏற்றி வரப்பட்ட வாகனத்தை குழித்துறை அருகே விளவங்கோடு ஊராட்சி ஈத்தவிளை பகுதியில் வைத்து ஊர் மக்கள் மடக்கி சிறைபிடித்தனர்.

    இது குறித்து தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., களியக்காவிளை போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து அறிந்த விளவங்கோடு ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர், மேல்புறம் ஒன்றிய கவுன்சில் ரவிசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஊராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இந்த வாகனத்தை களியக்காவிளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, கேரளாவில் இருந்து எல்லை பகுதிகள் வழியாக இரவு நேரங்களில் வரும் டிப்பர், கண்டெய்னர் லாரிகள் மற்றும் டெம்போக்களில் கழிவு பொருட்கள் கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்கின்றனர். இதனை தடுக்க கூடுதல் தனிப்படை போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும், மேலும் அவ்வாறு கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு நிறுத்தாமல் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், எல்லை பகுதியில் ஒரு சில போலீசாரை மட்டும் வைத்து பணி மேற்கொண்டால் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடைபெறும்.

    எனவே அப்பகுதியில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும் என கூறினர்.

    Next Story
    ×