search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது- கிராம மக்கள் நிம்மதி
    X

    சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது- கிராம மக்கள் நிம்மதி

    • தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
    • மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த 1 மாதம் முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் வேட்டையாடி கொன்றது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்த சிறுத்தை கொன்று வந்தது. அதேபோல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

    தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த சிறுத்தை கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்ற போது கூண்டுக்குள் சிக்கியது.

    இந்த நிலையில் இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர்.

    பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறை யினருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது. வனத்துறையினர் வந்து பார்த்த போது கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் கூண்டுடன் சிக்கிய ஆண் சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    Next Story
    ×