search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார்
    X

    திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார்

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல், சுவாச கோளாறு, கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு பாதிப்பு ஏற்படும்.

    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாண்டூர் கிராமத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனை வலியுறுத்தி கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் பெரு மாட்டுநல்லூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குடியிருக்கும் பாண்டூர் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமைக்க கூடாது. இது அமைந்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல், சுவாச கோளாறு, கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு பாதிப்பு ஏற்படும்.

    இப்பகுதியில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் அஸ்தினாபுரம் ஏரியும், 20மீட்டர் தூரத்தில் குழந்தைகள் காப்பகம் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன.

    எனவே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்யக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×