search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்பவானி மெயின் வாய்க்காலில் தண்ணீர் திருட்டு- முறைகேடாக தண்ணீர் கொண்டு சென்ற ஓஸ் பைப்புகள் அகற்றம்
    X

    கீழ்பவானி மெயின் வாய்க்காலில் தண்ணீர் திருட்டு- முறைகேடாக தண்ணீர் கொண்டு சென்ற ஓஸ் பைப்புகள் அகற்றம்

    • கீழ்பவானி வாய்க்காலை பொருத்தவரை கசிவு நீர் பாசனத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் எடுத்து அவர்களும் பயனடைவதற்காக தண்ணீர் வழங்குகிறோம்.
    • தற்போது தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஓஸ் பைப்புகளை முற்றிலுமாக அகற்றி விட்டோம்.

    பெருந்துறை:

    கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஆயக்கட்டு பாசனத்தில் இல்லாத விவசாயிகள் இரவு நேரங்களில் பெரிய ஓஸ் பைப்புகளை பயன்படுத்தி தண்ணீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி பாசனத்துக்கு பயன்படுத்தி வருவதாக பொதுப்பணித்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டது.

    ஏற்கனவே வாய்க்கால் நீர்க்கசிவு காரணமாக போதுமான அளவிற்கு தண்ணீரை கடைமடைக்கு சப்ளை செய்ய முடியாமல் உள்ள நிலையில் இரவு நேரங்களில் வாய்க்காலில் இருந்து ஓஸ் பைப்புகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி திருடுவதால் இதனைத் தடுக்க வேண்டும் என ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் நீர்வளத்துறையின் கவுந்தப்பாடி உதவி பொறியாளர் செந்தில்குமார், கோபி மேற்கு உதவி பொறியாளர் தினேஷ் மற்றும் லஷ்கர்கள் உள்ளிட்ட நீர்வளத்துறை ஊழியர்கள் இரவு கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ரோந்து சென்றனர்.

    பெத்தாம்பாளையத்தில் இருந்து கோபி வரையிலும் உள்ள கீழ்பவானி மெயின் வாய்க்கால் கரையில் சென்றபோது கோபி அருகே வெள்ளாங்கோவில் பகுதியில் 39-வது மைல் பகுதியிலும், 39/5-வது மைல் பகுதியிலும் பெரிய ஓஸ் பைப்புகளை பயன்படுத்தி விவசாய நிலத்துக்கு தண்ணீரை திருட்டுத்தனமாக கொண்டு செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    இதையடுத்து தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஓஸ் பைப்புகளை அங்கிருந்து அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு டிசம்பர் இறுதி வரையிலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இதுபோன்ற தண்ணீர் திருட்டு நடைபெற்றால் ஆயக்கட்டு பாசன விவசாயிகளை பாதிக்கும் என்பதால் இரவு நேரத்தில் ரோந்து சென்று தண்ணீர் திருட்டை கண்டுபிடித்தோம்.

    கீழ்பவானி வாய்க்காலை பொருத்தவரை கசிவு நீர் பாசனத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் எடுத்து அவர்களும் பயனடைவதற்காக தண்ணீர் வழங்குகிறோம். ஆனால், ஒரு சில இடங்களில் ஆயக்கட்டு அல்லாத பாசனதாரர்கள் இதுபோன்ற தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றனர்.

    இது பாசன விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. தற்போது தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஓஸ் பைப்புகளை முற்றிலுமாக அகற்றி விட்டோம். மீண்டும் இதுபோன்ற தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் அந்த விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    Next Story
    ×