என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழரை பிரதமர் ஆக்குவோம்... 25 இடங்கள் இலக்கு: தென்சென்னை பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா பேச்சு
    X

    தமிழரை பிரதமர் ஆக்குவோம்... 25 இடங்கள் இலக்கு: தென்சென்னை பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா பேச்சு

    • பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்கள் அமித் ஷாவை சந்தித்து பேசினர்.
    • மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

    சென்னை:

    பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்தடைந்த அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.

    அதன் பிறகு மத்திய மந்திரி அமித் ஷாவை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்கள் சந்தித்து பேசினர். அவர்களை மத்திய மந்திரி அமித்ஷாவிடம் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் சாதனைகளுக்காக அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.

    இன்று, கோவிலாம்பாக்கம் சென்ற அமித் ஷா, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாரதிய ஜனதா கட்சியினருடன் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

    ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:-

    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்குவோம். தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவற விட்டுள்ளோம். தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமர் ஆவதை தவறவிட்டுள்ளோம். இவ்வாறு இருமுறை பிரதமர்களை தவற விட தி.மு.க.தான் காரணம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். அதற்கான பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடவேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க உழைக்கவேண்டும். பாஜக நிர்வாகிகள், பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலமாக சென்னையிலிருந்து வேலூர் விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து 6 வழிச்சாலை வழியாக கந்தனேரி செல்லும் அவர், மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

    அமித்ஷா வருகை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கந்தனேரி பொதுக்கூட்ட மைதானத்தில் மேடையை சுற்றிலும் மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×