search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சூர் அருகே 4 போலீசாரை விடிய விடிய சிறைபிடித்த காட்டு யானைகள் கூட்டம்
    X

    மஞ்சூர் அருகே 4 போலீசாரை விடிய விடிய சிறைபிடித்த காட்டு யானைகள் கூட்டம்

    • போலீசார் மின்வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • அதிகாலையில் யானைகள் முழுவதும் சென்ற பின்னர் கட்டிடத்தில் இருந்த 4 போலீஸ்காரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை மின்நிலையம். குந்தா அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக ராட்சத குழாய்கள் மூலம் இங்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதற்காக பென்ஸ்டாக் பகுதியில் சர்ஜ்சாப்(காற்று போக்கி) அமைக்கப்பட்டுள்ளது. குழாய் பராமரிப்பு பணிகளுக்கு செல்லும் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு வின்ச் உள்ளது.

    இந்த பகுதியில் வெளியாட்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் மின்வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சம்பவத்தன்று இரவு 4 போலீஸ்காரர்கள் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் வெளியில் இருந்து சத்தம் வந்தது.

    உடனடியாக போலீசார் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தனர். அப்போது வெளியே 2 குட்டிகளுடன் காட்டு யானைகள் நின்றிருந்தன.

    இதனால் அதிர்ச்சியான போலீஸ்காரர்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து யானை நிற்கிறதா என்பதை பார்த்து கொண்டே இருந்தனர்.

    யானைகள் அங்கிருந்து நகராமல் அங்கேயே நின்றிருந்ததுடன், கட்டிடத்தை சுற்றி நின்று கொண்டது.

    இதனால் உள்ளே இருந்த போலீசாருக்கு பயம் ஏற்பட்டது. இதற்கிடையே தகவலின் பேரில் மஞ்சூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வனத்துறையை சேர்ந்த துரையுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அங்கு கட்டிடத்தை சுற்றி யானைகள் நின்றிருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியாகினர். உள்ளே இருப்பவர்களை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக யானையை விரட்டி பட்டாசு வெடித்தனர்.

    வெடி சத்தம் கேட்டதும் யானைகள் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றன. அதிகாலையில் யானைகள் முழுவதும் சென்ற பின்னர் கட்டிடத்தில் இருந்த 4 போலீஸ்காரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    போலீசார் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு மீண்டும் அந்த பகுதிக்கு வந்த காட்டுயானைகள் அங்கு இருந்த பொருட்களை மிதித்து சேதப்படுத்தியது.

    யானைகள் நடமாடத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ரேஞ்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

    கெத்தை மின்நிலையத்தில் போலீஸ்காரர்களை விடிய விடிய காட்டு யனைகள் சிறைபிடித்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×