என் மலர்
இந்தியா

'யூ-டியூப்' வீடியோ பார்த்து டயட் இருந்த மாணவி உணவுக்குழாய் சுருங்கி உயிரிழப்பு

- அதிக எடை குறைப்புக்கான டயட்டை அவர் பின்பற்றி வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.
- ஸ்ரீநந்தாவின் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கிவிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.
திருவனந்தபுரம்:
'யூ-டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அவற்றில் உடல் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக இருக்கும். அவற்றை பின்பற்றி நடந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
அதே நேரத்தில் சில ஆதாரமற்ற வீடியோக்களை பார்ப்பவர்கள், அதனை பின்பற்றி நடக்கும் போது பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள். உடல் ஆரோக்கியம், நோய் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் செய்வது சில நேரங்களில் நமது உயிருக்கே ஆபத்தான விஷயமாக மாறிவிடுகிறது.
அப்படித்தான் கேரளாவில் ஒரு சம்பவம் தற்போது நடந்திருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக 'யூ-டியூப்' வீடியோவை பார்த்து உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்த கல்லூரி மாணவி ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்து பரம்பா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களது மகன் யதுவந்த், மகள் ஸ்ரீநந்தா (வயது18). மட்டனூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை படித்து வந்த ஸ்ரீநந்தா, தனது உடல் எடை அதிகமாக இருப்பதாக எண்ணினார்.
இதனால் தனது உடல் எடையை குறைக்க திட்டமிட்டார். இதற்காக அவர் உடல் எடை குறைப்பு தொடர்பான வீடியோக்களை யூ-டியூப்பில் பார்த்துள்ளார். அந்த வீடியோக்களில் வருவது போன்று உணவை குறைத்து சாப்பிட்டபடி இருந்திருக்கிறார்.
அதிக எடை குறைப்புக்கான டயட்டை அவர் பின்பற்றி வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் தலச்சேரி கூட்டுறவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஆகவே அவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக உணவு சாப்பிடுவதை குறைத்ததன் காரணமாக ஸ்ரீநந்தாவின் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கிவிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.
இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ரீநந்தா பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மகளை இழந்த பெற்றோர் கதறி துடித்தனர்.
மாணவி இறந்தது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையின் டாகடர் நாகேஷ்பிரபு கூறியிருப்பதாவது:-
உணவுக்கோளாறு காரணமாக வரக்கூடிய அனோரெக்சியா நெர்வோ சாவால் மாணவி பாதிக்கப்பட்டிருந்தார். உடல் எடையை அதிகமாக குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பசியுடனே இருந்திருக்கிறார். தண்ணீர் உணவையே அதிகமாக சாப்பிட்டுள்ளார்.
இந்த உணவு முறையை 6 மாதங்களாக பின்பற்றியுள்ளார். மாணவி ஸ்ரீநந்தா விஷயத்தில் அவரது உடில் சோடியம் மற்றும் சர்க்கரை அளவுகள் குறைந்தது. அதனை சரிசெய்த பிறகும் அவற்றின் அளவு குறைந்த படியே இருந்தது.
அனோரெக்சியா நெர்வோசா மேற்கத்திய நாடுகளில் பொதுவானது. ஆனால் கேரளாவில் மிகவும் அரிதானது. அனோரெக்சியா நெர்வோசா பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் காலப்போக்கில் தங்களின் பசி உணர்வை இழக்கிறார்கள். இது அனைத்து வயது மற்றும் உடல்வகையினரையும் பாதிக்கும்.
சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணமடைதல் சாத்தியமாகும். இருப்பினும் இத்தகைய கோளாறுகள் ஒரே நாள் இரவில் குணமாகாது. ஒருவர் பாதிக்கப்பட்ட காலத்தின் தீவிரம் மற்றும் நீளத்தை பொறுத்து குணமடைய நீண்ட காலம் ஆகலாம்.
அனோரெக்சியா நெர்வோசா என்பது முற்றிலும் ஒரு உணவு கோளாறும் இல்லை. இது ஒரு உளவியல் நிலையாகும். எனவே மாணவி ஸ்ரீநந்தா நீண்ட காலத்துக்கு முன்பே மனநல சிகிச்சை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.