search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழா- 21 கட்சிகளுக்கு அழைப்பு
    X

    ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழா- 21 கட்சிகளுக்கு அழைப்பு

    • ராகுல் காந்தியின் பாத யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில், கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, பல்வேறு மாநிலங்களை கடந்து இன்று பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த யாத்திரையின் போது நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களை சந்தித்துள்ளார் ராகுல்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக மம்தா பானர்ஜியினி திரிணாமுல் காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் அனுப்பி உள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சீனாவில் கொரோனா தொற்றுநோய் மீண்டும் பரவியதைத் தொடர்ந்து, நெறிமுறைகளை அமல்படுத்துமாறு மத்திய அரசிடம் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியது. இதன்மூலம் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை ஆம் ஆத்மி கட்சி மறைமுகமாக தாக்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு-காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் மற்றும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் மாநில பிரிவு தலைவர்கள் யாத்திரையில் இணைய உள்ளனர். குப்கார் கூட்டணியின் மற்றொரு உறுப்பினரான எம்ஒய் தாரிகாமியும் கலந்து கொள்ள உள்ளார்.

    Next Story
    ×