என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு: டெல்லி ஐகோர்ட்டு அறிவிப்பு
- டெல்லி ஐகோர்ட்டு விசாரணை நீதிமன்றம் கிடையாது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை.
- சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பு சரியா? தவறா என்பது குறித்த வாதங்கள் மற்றும் விசாரணை மட்டுமே டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது என்றும், இதனால் அரசுக்கு ரூ1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும் மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரியாக இருந்த வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து அப்போதைய மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
பின்னர் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் சேர்க்கப்பட்டார். அவர் அதே ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த வழக்கை விசாரித்தார்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் கனிமொழி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு ஆ.ராசா ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் 2014-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டில் மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு அளித்தார்.
இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தாமதமானதால், மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பல மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் விசாரணை நடத்தினார்.
மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக வக்கீல்கள் வாதங்களும் நடந்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ்குமார் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந்தேதி தள்ளி வைத்தார்.
இந்த வழக்கில் இன்று காலை டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தினேஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து கனிமொழி, ஆ.ராசா மீதான 2ஜி வழக்கு மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை வருகிற மே மாதத்தில் இருந்து தொடங்கும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
டெல்லி ஐகோர்ட்டு விசாரணை நீதிமன்றம் கிடையாது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை. சாட்சியங்கள் விசாரணையும் நடைபெறாது. ஏற்கனவே இந்த வழக்கின் சாட்சியங்கள் விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு விட்டன.
எனவே, சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பு சரியா? தவறா என்பது குறித்த வாதங்கள் மற்றும் விசாரணை மட்டுமே டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறும். புதிதாக சாட்சியங்களை பதிவு செய்வதற்கோ, குறுக்கு விசாரணை செய்வதற்கோ வாய்ப்பு இல்லை. எனவே டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை விரைவில் முடிவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளராக கனிமொழியும், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஆ.ராசாவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்