என் மலர்
இந்தியா
கேரளாவில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு- 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
- 64.5மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கேரள மீனவர்கள் வருகிற 21-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த இரணடு வாரங்களுக்கு முன்பு அங்கு மழை பெய்தது.
பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இதன் காரணமாக கண்ணூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலையோர பகுதிகளில் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரு வாரத்திற்கும் மேலாக தஞ்சம் அடைந்திருந்தனர்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக கேரள மாநிலத்தில் மழை இல்லை. இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கின. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த வர்கள் தங்களில் வீடுகளுக்கு திரும்பி செல்ல தொடங்கினர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்தமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று முதல் 21-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று மட்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் 64.5மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மீனவர்கள் இன்றுமுதல் வருகிற 21-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.