search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டி சாதனை படைத்த 5½ வயது இந்திய சிறுமி பிரிஷா
    X

    எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை அடைந்து சாதனை படைத்த சிறுமி பிரிஷா, அங்கு இந்திய தேசியக்கொடியுடன் ‘போஸ்’ கொடுத்த காட்சி.

    எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டி சாதனை படைத்த 5½ வயது இந்திய சிறுமி பிரிஷா

    • அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.
    • எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார்.

    போபால்:

    எவரெஸ்டின் அடிவார முகாம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு ஏக சிரமப்படுவார்கள். ஆனால் 5½ வயதே ஆகும் பிரிஷா, இந்த உயரத்தை தொட்டு, பிரமிப்பூட்டி இருக்கிறார்.

    பிரிஷாவின் பூர்வீகம் மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் என்றாலும், மகாராஷ்டிர மாநிலம் தானேயில் தனது பெற்றோர், 2 சகோதரிகளுடன் வசிக்கிறார்.

    மும்பையில் ஐ.டி. என்ஜினீயராக பணிபுரியும் லோகேஷ், ஒரு மலையேற்ற வீரரும்கூட. அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.

    அதையடுத்து அவருக்கு மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை தந்தை லோகேசும், தாய் சீமாவும் வழங்கியிருக்கிறார்கள். அதன் விளைவாக, பிரிஷா தனது 2½ வயதிலேயே மலையேறத் தொடங்கிவிட்டார். தனது 3 வயதில், மகாராஷ்டிரத்திலேயே உயரமான சிகரமான கால்சுபாயை தொட்டுவிட்டார்.

    அந்த வழியில், எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார்.

    தினமும் 5, 6 மைல் தூரம் நடப்பது, ஏரோபிக்ஸ் பயிற்சி, தனது அடுக்குமாடிக் குடியிருப்பு படிகள், பூங்கா சுவரில் ஏறுவது என்று தயாரானார்.

    கடந்த மே 24-ந்தேதி நேபாளத்தின் லுக்லாவில் இருந்து தனது தந்தையுடன் மலையேற்றத்தை தொடங்கிய பிரிஷா, இம்மாதம் 1-ந்தேதி எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தார். அங்கு இந்திய தேசியக்கொடியுடன் பெருமிதத்தோடு 'போஸ்' கொடுத்தார்.

    'இவ்வளவு உயரமான இடத்தை எட்டுவதற்கு பெரியவர்களான மலையேற்ற வீரர்களே மிகவும் சிரமப்படுவார்கள். பலருக்கு மூச்சுத்திணறல், தலைவலி, மலைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் பிரிஷா கஷ்டங்களை எல்லாம் எளிதாக கடந்து இந்த சாதனையை படைத்துவிட்டாள்' என்று பூரிப்பாய் சொல்கிறார் தந்தை லோகேஷ்.

    அடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் பிரிஷா ஏறுவார் என்றும் அவர் கூறுகிறார்.

    இந்த குட்டிப்பெண், மலையேற்றத்தில் கெட்டிதான்!

    Next Story
    ×