search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மணிப்பூர் 50 நாட்களாக பற்றி எரிகிறது; பிரதமர் தனது கடமையில் தவறி விட்டார்- காங்கிரஸ் கடும் தாக்கு
    X

    மணிப்பூர் 50 நாட்களாக பற்றி எரிகிறது; பிரதமர் தனது கடமையில் தவறி விட்டார்- காங்கிரஸ் கடும் தாக்கு

    • பிரதமர் கவலைப்படுகிறார் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
    • வாக்குறுதியளிக்கப்பட்ட "அதிகபட்ச ஆட்சி" எங்கே? என சசி தரூர் கேள்வி எழுப்பினார்.

    மணிப்பூரில் கலவரம் தொடங்கி 50 நாட்கள் ஆகி, வன்முறையால் பாதிக்கப்பட்டு மாநிலமே பற்றி எரியும் நிலையில் அம்மாநிலத்தை புறக்கணிப்பதன் மூலம் பிரதமர் மோடி தனது கடமையை செய்வதில் இருந்து முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார் என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    மணிப்பூரில் "அதிகபட்ச கண்டுகொள்ளாமை, குறைந்தபட்ச ஆட்சி" என பா.ஜ.க. செயல்படுகிறது. பிரதமரின் அமெரிக்கப் பயணம் குறித்த அனைத்து செய்திகளுக்கும் மத்தியில், மணிப்பூரின் வலி 50வது நாளாக தொடர்கிறது என்பதை நினைவூட்டுகிறோம். எத்தனையோ விஷயங்களில் பாடம் எடுக்கும் அவர், துரதிர்ஷ்டவசமாக, மணிப்பூர் சோகத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவரை சந்திக்க நேரம் கேட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு அனுமதியில்லை. பிரதமர் கவலைப்படுகிறார் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. நெருக்கடியான நேரத்தில் மணிப்பூரை புறக்கணிப்பதின் மூலம் பிரதமராக தனது கடமையிலிருந்து முற்றிலும் தவறிவிட்டார். அவரது நடத்தை அதிர்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவர் சசி தரூர் கூறுகையில், 'கடந்த 50 நாட்களில் வேறு எதற்கு ஒரு பெரிய முன்னுரிமை இருந்திருக்க முடியும்? வாக்குறுதியளிக்கப்பட்ட "அதிகபட்ச ஆட்சி" எங்கே? தொழில்நுட்பம் முதல் மின்-ஆளுமை வரை இணையத்தைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்ளும் அரசு, மணிப்பூரில் ஏன் இரண்டு மாதங்களுக்கு இணையத்தை முடக்கியது? இணையத்தை உடனுக்குடன் முடக்கும் இத்தகைய எதிர்வினைகள் நிறுத்தப்பட வேண்டும். உலகிலேயே நீண்ட காலத்திற்கு இணையத்தை முடக்கியதற்கான "உலக சாதனைக்கு" நாம் சொந்தம் கொண்டாடப் போகிறோம்' என தெரிவித்தார்.

    மற்றொரு காங்கிரஸ் முக்கியஸ்தரான மணிப்பூர் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் நிங்கோம்பம் புபெண்டா மெய்தி கூறியிருப்பதாவது:

    மணிப்பூரில் நிலவும் கொந்தளிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? - மாதங்களா அல்லது ஆண்டுகளா அல்லது தசாப்தங்களா? 50 நாட்களாக மௌனம் காக்கும் பிரதமரின் கருத்தைக் கேட்க அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை உள்ளது. இணையத்தடையை பல முறை நீட்டித்ததால் மணிப்பூர் கிட்டத்தட்ட 2 மாதங்களாக "இருளில்" இருக்கிறது. பல தொழில் வல்லுநர்கள் இணையத் தடையால் ஏற்கனவே மாநிலத்தை விட்டு சென்று விட்டனர்.

    இவ்வாறு மெய்தி கூறியுள்ளார்.

    இன மோதல்களால் உருக்குலைந்திருக்கும் மணிப்பூரின் 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், டெல்லியில் முகாமிட்டு, ஜூன் 10 முதல் பிரதமரிடம் கருத்து கேட்க முயன்று வருகின்றனர்; ஆனால் இதுவரை அவர்களை பிரதமர் சந்திக்கவில்லை. இதனால் அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    Next Story
    ×