search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    6-வது கட்டத்தேர்தல்: பிரதமர் மோடி-ராகுல் நாளை டெல்லியில் போட்டி போட்டு பிரசாரம்
    X

    6-வது கட்டத்தேர்தல்: பிரதமர் மோடி-ராகுல் நாளை டெல்லியில் போட்டி போட்டு பிரசாரம்

    • 5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை.
    • பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 4 கட்டத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

    5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை 49 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த 49 தொகுதிகளிலும் நாளை மாலை பிரசாரம் ஓய உள்ளது.

    இதையடுத்து, 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. 6-வது கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    6-வது கட்டத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடத்தப்பட உள்ளது. இந்த 57 தொகுதிகளில் பீகாரில் 8, அரியானாவில் 10, ஜார்க்கண்டில் 4, ஒடிசாவில்-6, உத்த ரபிரதேசத்தில்-14, மேற்கு வங்காளத்தில்-8, டெல்லியில்-7 என்ற வகையில் தொகுதிகள் அடங்கி உள்ளன.

    இதில் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    5-ம் கட்டத் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்று உள்ள நிலையில் 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை முதல் தீவிரமாக மாற இருக்கிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் 6-வது கட்டத் தேர்தல் நடக்கும் அரியானா, டெல்லி, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த மாநிலங்களில் டெல்லி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாரதீய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவையும் 7 தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    டெல்லியில் சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என்று 7 தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை பாரதீய ஜனதா களம் இறக்கி உள்ளது.

    டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 3 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடு கின்றன.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளி லும் போட்டியிடுகிறது என்றாலும் டெல்லியில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.

    டெல்லியில் பா.ஜ.க., இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் தவிர, 99 சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. 49 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். மொத்தத்தில் 162 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள்.

    அவர்கள் அனைவரும் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 6 நாட்களே அவகா சம் உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் உச்சக்கட்ட பிரசாரம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், டெல்லி யில் நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடியும், காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் ஒரே நாளில் தேர்தல் பிரசாரம் செய்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர். பிரதமர் மோடி நாளை வடகிழக்கு டெல்லி தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அந்த தொகுதியில் உள்ள கோண்டா என்ற இடத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனப் பேரணி நடத்திவிட்டு அந்த கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதால் நாளை டெல்லியில் மோடி பிரசா ரத்தில் பல்லாயிரக்கணக் கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை 2 தொகுதிகளில் ஆதரவு திரட்ட உள்ளார். சாந்தினி சவுக் மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதி களில் அவர் வாகனப் பேரணி நடத்துகிறார்.

    அதன் பிறகு அவர் சாந்தினி சவுக் தொகுதியில் அசோக் விகார் என்ற பகுதியில் ஜே.பி.அகர்வா லையும், வடமேற்கு டெல்லி தொகுதியில் உதித் ராஜையும் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு பிறகும் 2 நாட்கள் டெல்லியில் பிரசாரம் செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி நாளை ஒரு கூட்டத்தில் பேசிய பிறகு மீண்டும் 22-ந் தேதி டெல்லியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்று வடமேற்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் வாகனப் பேரணி நடத்த உள்ளார். அந்த தொகுதியில் உள்ள துவாரகா என்ற இடத்திலும் பொதுக் கூட்டத்திலும் பேச இருக்கிறார்.

    இதற்கிடையே இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்காவும் டெல்லியில் 2 அல்லது 3 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இஸ்லா மியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு பிரியங்கா செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, சாந்தினி சவுக் தொகுதியில் உள்ள 3 இடங்களில் பிரியங்கா பொதுக் கூட்டத்தில் பேச இருக்கிறார்.

    ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்-மந்திரியு மான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் 6 நாட்களும் முற்றுகையிட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் சேர்ந்து ஆதரவு திரட்ட உள்ளார். கெஜ்ரிவால் மாடல் டவுன், ஜகான்கீர் பூத் பகுதிகளில் வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்.

    ஆம் ஆத்மி வேட்பா ளர்கள் போட்டியிடும் தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, புதுடெல்லி ஆகிய 4 தொகுதிகளிலும் முக்கிய வீதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டவும் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். அவர் தவிர ஆம் ஆத்மி மூத்த தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் சென்று பேச ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் 7 தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    வருகிற 20-ந் தேதி புதுடெல்லி தொகுதியிலும், 21-ந் தேதி சாந்தினி சவுக் தொகுதியிலும் நட்டா வாகனப் பேரணி நடத்த உள்ளார். தலை வர்களின் முற்றுகையால் டெல்லியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    Next Story
    ×