search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களால் களைகட்டிய டெல்லி: பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியது
    X

    அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களால் களைகட்டிய டெல்லி: பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியது

    • கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
    • ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிகாலம் இன்னும் 4 மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தயாராக தொடங்கி உள்ளது.

    டெல்லியில் இது தொடர்பாக அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். வாக்காளர் பட்டியல், ஓட்டுச் சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரச்சார கட்டுப்பாடுகள் என்று பல்வேறு வகைகளில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    அடுத்த கட்டமாக அடுத்த மாதம் (ஜனவரி) முதல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தேர்தல் ஆணையர்கள் அனுப் பாண்டே, அருண் கோயல் ஆகிய மூவரும் மாநில வாரியாக சுற்றுப் பயணம் செய்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். 543 தொகுதிகளிலும் எத்தகைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து பட்டியல் தயாரிப்பார்கள்.

    அதன் அடிப்படையில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது 7 கட்டமாக ஓட்டுப் பதிவு நடந்தது. இந்த தடவையும் அதேபோன்று ஓட்டுப்பதிவு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் 10 லட்சத்து 18 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்க முதல் கட்டமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை கூடுதலாக தேவைப்படும். எனவே ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மின்னணு எந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    கடந்த தேர்தல்களில் இல்லாத வகையில் இந்த தடவை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையர்கள் கருதுகிறார்கள்.

    இது தவிர சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×