search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி பிரமாண்ட பேரணி... பாதுகாப்பு அதிகரிப்பு
    X

    டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி பிரமாண்ட பேரணி... பாதுகாப்பு அதிகரிப்பு

    • பேரணியில் சுமார் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்றும், ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் கூறியது. டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது எனவும் தெரிவித்தது.

    இந்த தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதாவது, குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையில், நிரந்தரமாக தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்காக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார். பாராளுமன்றத்தில் அவசர சட்டத்தை தோற்கடிக்கவும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்டமான பேரணி நடத்தப்பட உள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் அந்தந்த தொகுதிகளில் இருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். பேரணி காலை 10 மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியின் நிறைவில் ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் உரையாற்றுகிறார்.

    இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா தெரிவித்துள்ளார். இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்திலும், மைதானத்தை சுற்றியும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மைதானத்தின் நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட உள்ளனர். மைதானத்திற்குள் வருபவர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவார்கள்.

    Next Story
    ×