என் மலர்
இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஆதில் அகமது?
- 2018-ம் ஆண்டு மாணவர் விசா மூலம் இவன் பாகிஸ்தானுக்கு சென்றான்.
- 2024-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் பல இடங்களில் கைவரிசை காட்டி வருகிறான்.
புதுடெல்லி:
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் காஷ்மீரை சேர்ந்த ஆதில் அகமது தோகர் என்று தெரியவந்துள்ளது.
இவன் காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள குர்ரே என்ற சிறிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவன். சிறு வயதிலேயே இவனுக்கு தீவிரவாத இயக்கம் மீது நாட்டம் ஏற்பட்டது.
2018-ம் ஆண்டு மாணவர் விசா மூலம் இவன் பாகிஸ்தானுக்கு சென்றான். அப்போது இவன் மீது சந்தேகப்பட்டு உளவுத்துறையினர் இவனை பின் தொடர்ந்தபடி இருந்தனர்.
பாகிஸ்தானில் மாயமான இவன் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து ஆயுத பயிற்சி பெற்று உள்ளான். 6 ஆண்டுகள் கழித்து 2024-ம் ஆண்டு இவன் இந்தியாவுக்குள் ஊடுருவி வந்தான்.
அப்போது அவனுடன் 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளும் வந்தது டிஜிட்டல் புள்ளி விவர ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் பல இடங்களில் கைவரிசை காட்டி வருகிறான்.
இதை உளவுத்துறையினர் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். பஹல்காம் தாக்குதல் மூலம் இவன் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு சதி திட்டங்களை இவன் மூலம் நிறைவேற்ற பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.






