search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமயமலையில் விமான விபத்து: 56 ஆண்டுகளுக்குப் பிறகு 4 ராணுவ வீரர்கள் உடல் மீட்பு
    X

    இமயமலையில் விமான விபத்து: 56 ஆண்டுகளுக்குப் பிறகு 4 ராணுவ வீரர்கள் உடல் மீட்பு

    • 2019-ம் ஆண்டு 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
    • 10-ந்தேதி வரை அப்பகுதியில் தேடுதல் பணி தொடரும்.

    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 12 ரக இரட்டை எஞ்சின் விமானம் 102 வீரர்களை ஏற்றிக்கொண்டு கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி சண்டிகரில் இருந்து காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

    இமாச்சல பிரதேச மாநிலம் இமயமலை பகுதியில் உள்ள ரோஹ்தாங் கணவாய் பகுதியில் சென்ற போது திடீரென விபத்தில் சிக்கிய விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 102 பேரும் பலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் பனிக்கட்டி படர்ந்த அந்த பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் இறந்தவர்களின் சடலங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் சடலங்களை மீட்க முடியவில்லை.

    இதன் பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு மலையேறும் நிபுணர்கள் விமானத்தின் சிதறிய பாகங்களை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் சடலங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியில் இருந்து 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் டோக்ரா சாரணர்கள் மற்றும் திரங்கா மலை மீட்பு பணியாளர்கள் குழுவினர் சந்திரபாகா மலைப்பயணத்தின் போது மேலும் 4 வீரர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணி நடந்தது. இதில் அவர்கள் மல்கான் சிங், சிப்பாய் நாராயண் சிங், தாமஸ் சரண் என்பது தெரியவந்துள்ளது. இதில் தாமஸ் சரண், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூரைச் சேர்ந்தவர். அவரது தாயார் எலியாமாவிடம் தாமஸ் சரண் உடல் மீட்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராணுவ ஆவணங்களின் உதவியுடன் மல்கான் சிங்கின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. ராணுவ மருத்துவப் படையில் பணியாற்றிய சிப்பாய் நாராயண் சிங்கும், அதேபோல அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

    அவர் உத்தரகாண்ட் மாநிலம் கர்வாலில் உள்ள சாமோலி தாலுகா கோல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

    இன்னொருவரின் உடலை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்திய விமானப் படையின் ஏ.என். 12 விமானம் விழுந்து நொறுங்கி 56 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வருகிற 10-ந்தேதி வரை அப்பகுதியில் தேடுதல் பணி தொடரும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×