search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் பரவும் பறவைக்காய்ச்சல்... சிக்கன் கடைகளை மூட உத்தரவு
    X

    ஆந்திராவில் பரவும் பறவைக்காய்ச்சல்... சிக்கன் கடைகளை மூட உத்தரவு

    • மாநிலம் முழுவதும் 721 குழுக்களும், நெல்லூர் மாவட்டத்தில் 37 குழுக்களும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
    • கோழிகள் இறந்த பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவில் 3 நாட்களுக்கு சிக்கன் கடைகளை மூட வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம் சட்லகுட்டா, கும்மல்லா திப்பா ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.

    திருப்பதி மாவட்டம் போல் புலிக்காட் ஏரியில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள் மூலம் இந்த நோய் பரவியுள்ளது. ஆந்திராவில் இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் 721 குழுக்களும், நெல்லூர் மாவட்டத்தில் 37 குழுக்களும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்வேறு இடங்களில் கோழிகளை புதைத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஹரிநாரயணன் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    கோழிகள் இறந்த பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவில் 3 நாட்களுக்கு சிக்கன் கடைகளை மூட வேண்டும். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சிக்கன் கடைகள் 3 மாதங்களுக்கு திறக்கக்கூடாது. இறந்த கோழிகளை மண்ணில் புதைக்க வேண்டும்.

    15 நாட்களுக்கு கோழிகள் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யாமலும், இறக்குமதி செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாவட்ட போலீசார் மற்றும் மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் 2 கிராமங்களிலும் கிராம கூட்டங்களை நடத்த வேண்டும்.

    கடை உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்தந்த கிராமங்களின் எல்லைக்குள் சுத்திகரிப்பு செய்து நோய்தொற்றை தடுக்க பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.

    பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், மனிதர்களின் நுரையீரலில் உள்ள சுவாச மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. சுகாதார துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×