search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதாவின் வெற்றியில் தமிழகத்தின் பங்கு பெரியதாக இருக்கும்: அனுராக்சிங் தாக்குர்
    X

    பா.ஜனதாவின் வெற்றியில் தமிழகத்தின் பங்கு பெரியதாக இருக்கும்: அனுராக்சிங் தாக்குர்

    • கேரளாவில்கூட ஓட்டு சதவீதம் எங்களுக்கு உயர்ந்து இருக்கிறது
    • நாட்டை விற்கும் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

    புதுடெல்லி:

    மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்குர் டெல்லியில் 'தினத்தந்தி' உள்பட பிராந்திய மொழி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18-வது மக்களவைக்கான தேர்தல் நடக்கிறது. உலகமே இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு நாட்டுக்கு தொடர்ச்சியான, நிலையான தலைமை வேண்டும். தொடர்ச்சியான, நிலையான ஆட்சி மிகவும் அவசியம். தலைவராக இருப்பவர் நேர்மையாக இருக்க வேண்டும்.

    பிரதமர் மோடி நேர்மையான, மூத்த மற்றும் முதிர்ந்த அனுபவம் மிக்க தலைவர். கடந்த 10 ஆண்டுகளில் சாலைகள், சுரங்கப்பாதைகள், ரெயில்பாதைகள் போன்ற உள்கட்டமைப்புகளை தந்திருக்கிறார். ரபேல், தேஜஸ் போன்ற விமானங்களை நாமே தயார் செய்கிறோம். ராணுவ ஆயுதங்களையும் நாமே தயாரிக்கிறோம். எனவே இந்த ஆட்சியின் தொடர்ச்சி நாட்டுக்கு தேவை.

    தமிழ்நாட்டை கடந்த தேர்தலை வைத்து ஏன் பார்க்கிறீர்கள்? இந்த தேர்தலை பாருங்கள். பா.ஜனதாவுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது. பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்தார். காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமங்கள் நடத்தினார். பேசிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவரின் திருக்குறளை கோடிட்டு காட்டினார். தமிழிலும் பேசுகிறார். ராமர்கோவில் சிலை பிரதிஷ்டை விழாவின்போதும், அதன்பிறகும் பலமுறை தமிழ்நாடு சென்றிருக்கிறார். தமிழ்நாடு மீது அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

    இந்த காரணங்களால் பா.ஜனதா அங்கு வெற்றி பெறும். தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அதிக இடங்கள் கிடைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் இடங்கள் கிடைக்கும்.

    கேரளாவில்கூட ஓட்டு சதவீதம் எங்களுக்கு உயர்ந்து இருக்கிறது. மக்கள் அங்கு அமைதியான அரசியலை விரும்புகிறார்கள். மத்தியில் நல்ல ஆட்சியால் பா.ஜனதா அங்கு வளர்ந்துள்ளது. எனவே இந்த முறை பெரிய மாற்றம் அங்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இதைப்போல ஒடிசாவிலும் ஆட்சிக்கு வருவோம். ஆந்திராவில் எம்.பி.க்கள் எண்ணிக்கையும் அதிகம் ஆகும். ஆட்சியையும் பா.ஜனதா கூட்டணியே பிடிக்கும். ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாற்றாக மக்கள் பா.ஜனதா கூட்டணியை விரும்புகிறார்கள். தெலுங்கானாவில் முன்பு 4 இடங்களை வென்றோம். இந்த முறை 9 இடங்களை வெல்வோம்.

    நாட்டை விற்கும் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள். டீ விற்ற மோடிக்குத்தான் ஓட்டு போடுவார்கள். 2019-ல் 303 இடங்கள் தந்தனர். 2024-ல் 405 இடங்களைத் தருவார்கள்.

    பிரதமர் மோடி 4 கோடி மக்களுக்கு வீடு தந்து இருக்கிறார். 12 கோடி வீடுகளுக்கு கழிவறை தந்துள்ளார். சமையல் கியாஸ் இணைப்பு கொடுத்துள்ளார். 13 கோடி மக்களுக்கு வீட்டுக்குழாய் நீர் இணைப்பு கொடுத்துள்ளார். அதிக மருத்துவ கல்லூரிகள், ஐ.ஐ.டி.கள் தந்திருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் அதிகமாக செய்வார். 'சோஷியல், டிஜிட்டல், பிசிக்கல்' என இந்த 3 நிலைகளிலும் முன்னேற்றத்தை தந்திருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு சமமாக நாட்டை உயர்த்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜனதாவுக்கு பாதகமாக இருக்கிறதே? என்று கேட்டதற்கு, ஜூன் 4-ந் தேதி வரை காத்திருங்கள். பா.ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்லும். அதில் தமிழகத்தின் பங்கு பெரியதாக இருக்கும் என்று கூறினார்.

    Next Story
    ×