search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகிவிட்டது... குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்
    X

    ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகிவிட்டது... குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்

    • குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 12.92 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன
    • ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம் என கெஜ்ரிவால் தெரிவித்தார்

    புதுடெல்லி:

    குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி, பாஜக 149 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது. ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி 12.92 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்துள்ளது ஆம் ஆத்மி. இதன்மூலம் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது.

    இதுபற்றி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது தேசியக் கட்சியாகி உள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குஜராத் மக்களுக்கும் நன்றி. ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம். தேர்தல் பிரசாரத்தின்போது வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 13 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாங்கள் அந்தக் கோட்டைக்குள் நுழைய முடிந்திருக்கிறது. இதுவரை 40 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×